தமிழ்நாடு

பிபிடிக்கு மாற்றாக 'எம்.ஜி.ஆர். 100' நெல் ரகம்

1st Dec 2017 02:27 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் புதன்கிழமை (நவ.29) நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். 100 என்ற நெல் ரகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட 'எம்.ஜி.ஆர். 100' என்ற புதிய நெல் ரகம் 'பி.பி.டி. 5204' மற்றும் 'கோ (ஆர்) 50' என்ற ரகங்களை ஒட்டுசேர்த்து, அதன் சந்ததியில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்த ரகம் 130 முதல் 135 நாள்கள் வயது கொண்டது. 
இதுகுறித்து ஆடுதுறை நெல் ஆய்வு மைய இயக்குநர் வெ. ரவி தெரிவித்தது: தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யப்படும் 20 லட்சம் ஹெக்டேரில் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் மத்திய கால நெல் ரகங்களே பயிரிடப்படுகிறது. அதிலும், மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் பிபிடி 5204 போன்ற மத்திய கால ரகங்கள் சிறந்த சமையல் பண்புகளுக்காக விவசாயிகளால் அதிக அளவில் விரும்பி பயிரிடப்படுகிறது. ஆனால், பூச்சி, நோய் தாக்குதலுக்கு உட்படுகிறது. எனவே, இதற்கு மாற்றாக எம்.ஜி.ஆர். 100 என்ற புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட 3 ஆண்டு கால ஆய்வில் சராசரியாக ஹெக்டேருக்கு 6,879 கிலோ மகசூல் கிடைப்பது கண்டறியப்பட்டது. 
அகில இந்திய ஒருங்கிணைந்த நெல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காரீப் பருவம் 2015-ல் ஐ.ஈ.டி. 25487 என்ற பெயரில் மத்திய சன்ன ஆரம்பக் கட்ட ஆய்வுத் திடலில் பரிசோதிக்கப்பட்டது. இதில், எம்.ஜி.ஆர். 100 நெல் ரகம் ஹெக்டேருக்கு 6,885 கிலோ மகசூல் தந்தது. இது, தேசிய அளவிலான ஒப்பீட்டு ரகங்களான டபிள்யூ.ஜி.எல். 14 ரகத்தை விட 11.47 சதவீதமும், பிபிடி 5204 ரகத்தை விட 33.78 சதவீதமும் மற்றும் மண்டல அளவிலான ஒப்பீட்டு ரகமான ஆடுதுறை 49-ஐ விட 91.19 சதமும் கூடுதல்.
எம்.ஜி.ஆர். 100 நெல் ரகம் தமிழகத்தில் 2013 - 14 மற்றும் 2014 - 15 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 21 மாவட்டங்களில் 158 இடங்களில் அணுசரணை ஆய்வுத் திடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 24 இடங்களில் ஹெக்டேருக்கு 7,000 கிலோவுக்கு மேல் கூடுதல் மகசூல் தரக்கூடியது எனக் கண்டறியப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த ஆய்வுகளின்படி சராசரியாக ஹெக்டேருக்கு 6,191 கிலோ மகசூல் தந்தது. இது, புகையான், தத்துப்பூச்சி, குலை நோய், இலையுறை அழுகல் நோய், பழுப்பு புள்ளி நோய், இலையுறை கருகல் நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறனுடையது. சன்ன அரிசியை உடைய இந்த ரகம் அதிக அரைவைத் திறனும், முழு அரிசி காணும் திறனும் கொண்டது என்றார் ரவி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT