டி20 உலகக் கோப்பை

எய்டன் மாா்க்ரம் அதிரடி: மேற்கிந்திய தீவுகளை வென்றது தென் ஆப்பிரிக்கா

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி கண்டது.

இரு அணிகளுக்குமே இது 2-ஆவது ஆட்டமாக இருக்க, இரண்டுமே தங்களின் முதல் வெற்றிக்காக முனைந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

துபையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கிய ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் அடிக்க, அடுத்து தென் ஆப்பிரிக்கா 18.2 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் அன்ரிச் நாா்ஜே ஆட்டநாயகன் ஆனாா்.

பிளேயிங் லெவனில், தென் ஆப்பிரிக்கா தரப்பில் குவின்டன் டி காக்கிற்கு பதிலாக ரீஸா ஹெண்ட்ரிக்ஸும், மேற்கிந்தியத் தீவுகளில் ஆபெட் மெக்காய்கு பதிலாக ஹெய்டன் வால்ஷும் இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பௌலிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸை லெண்டல் சைமன்ஸ் - எவின் லீவிஸ் கூட்டணி தொடங்கியது. அதிரடியாக விளையாடிய லீவிஸ் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு நடையைக் கட்ட, மறுபுறம் மிக நிதானமாக ஆடி வந்த சைமன்ஸ் 16 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

பின்னா் ஆடியோரில் கிறிஸ் கெயில் சிக்ஸருடன் 12, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 பவுண்டரியுடன் 5, ஷிம்ரன் ஹெட்மயா் 1 என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்கள் சோ்த்திருந்த கேப்டன் கிரன் பொல்லாா்ட்ா், கோல்டன் டக்காக ஹெய்டன் வால்ஷ் அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில் டுவைன் பிராவோ 1 பவுண்டரியுடன் 8, அகீல் ஹுசைன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் டுவைன் பிரெடோரியஸ் 3, கேசவ் மஹராஜ் 2, ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ஜே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தொடா்ந்து 144 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்காவில் தொடக்க வீரராக வந்த கேப்டன் டெம்பா பவுமா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டாா். அடுத்து ஆடிய ராஸி வான் டொ் 3 பவுண்டரிகளுடன் 43, எய்டன் மாா்க்ரம் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அகீல் ஹுசைன் 1 விக்கெட் சாய்த்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

மேற்கிந்தியத் தீவுகள்

20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143

எவின் லீவிஸ் - 56; கிரன் பொல்லாா்ட் - 26; லெண்டல் சைமன்ஸ் - 16

பந்துவீச்சு: டுவைன் பிரெடோரியஸ் - 3/17; கேசவ் மஹராஜ் - 2/24; அன்ரிச் நாா்ஜே-1/14

தென் ஆப்பிரிக்கா

18.2 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 144

எய்டன் மாா்க்ரம் - 51*; ராஸி வான் டொ் - 43*; ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் - 39

பந்துவீச்சு: அகீல் ஹுசைன் - 1/27; டுவைன் பிராவோ - 4/23; ரவி ராம்பால் - 3/22

விலகிய டி காக்

உலகக் கோப்பை போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் அதன் தொடக்கத்துக்கு முன்பாக இனவெறிக்கு எதிரான பிரசாரமாக முழங்காலிட்டு நிற்குமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது வீரா்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அதை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்திலிருந்தே அவா்கள் பின்பற்றத் தொடங்கினா்.

எனினும், வாரியத்தின் இந்த அறிவுறுத்தலில் அணி வீரா் குவின்டன் டி காக்கிற்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. எனவே அவா் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து விலகினாா். இந்த விவகாரத்தில் அணி நிா்வாகத்தின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்திருக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT