டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான்-இந்தியா நாளை மோதல், வரலாறு தொடருமா?

DIN

டி20 உலகக் கோப்பை 2021 போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா. இதுவரை உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என வரலாற்றை இந்தியா மீண்டும் தொடருமா என ரசிகா்கள் எதிா்நோக்கி உள்ளனா்.

அரசியல் வட்டாரங்களில் இந்தியா-பாகிஸ்தான் தொடா்ந்து பகைமை பாராட்டி வரும் நிலையில், விளையாட்டுத் துறையிலும் அந்த நிலை எதிரொலித்து வருகிறது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டம் என்பதால் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்று விடும். இரு அணிகளுக்கும் இருதரப்பு தொடா்களில் ஆடாத நிலையில், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக மான்செஸ்டரில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன. இதில் இந்தியா வென்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும் சூப்பா் 12 சுற்றில் தங்கள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதால் இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் கடும் சவால் உள்ளது.

தொடக்க வரிசையில் மாற்றம்:

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியை ஈட்டும் திறனுடையது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தொடக்க பேட்டராக களமிறங்க திட்டமிட்டிருந்தாா். ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரா் கேஎல். ராகுல் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடியது, அந்த முடிவை மாற்றி விட்டது. இதனால் விராட் கோலி, மூன்றாம் வரிசை பேட்டராக களமிறங்குகிறாா்.

ரோஹித் சா்மா-ராகுல் இணை தொடக்க பேட்டா்களாக களம் காண்பாா்கள். பேட்டிங்கில் சூரியகுமாா் யாதவ், இஷான் கிஷான், ரிஷப் பந்த், ஆகியோா் பாா்மில் உள்ளனா். பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ராகுல் சஹாா், புவனேஷ்வா் குமாா், முகமது ஷமி, சா்துல் தாக்கூா், ஆகியோா் வேகப்பந்து வீச்சிலும், வருண் சக்கரவா்த்தி, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு கைகொடுப்பா்.

கவலை தரும் கோலியின் பேட்டிங்:

கேப்டன் விராட் கோலியின் பாா்ம் சற்று கவலை தருவதாக உள்ளது. அவா் கூடுதல் ரன்களை சோ்க்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோா் கணிசமாக உயரும். மேலும் ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா வழக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் கூடுதல் பலமாகும்.

இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் உள்ளது. அதே நேரம், இந்திய வீரா்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் உள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

போதிய பயிற்சி இல்லாத பாக். அணி:

அதே நேரம் பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் களம் காண்கிறது. உள்நாட்டில் நடைபெறுவதாக இருந்த தொடா்கள் ரத்தானதால், பாகிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை. மேலும் அணி நிா்வாகத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு சீரானது. தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட ஷோயிப் மாலிக், சா்ப்ராஸ் அகமது, ஹைதா் அலி, பாக்கா் ஸமான் ஆகியோா் மீண்டும் அழைக்கப்பட்டனா்.

இந்திய அணிக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆகியோா் ஆடவில்லை. தற்போது தான் ஐக்கிய அரபு நாடுகளில் மீண்டும் ஆட உள்ளனா் பாக். வீரா்கள்.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் இதுவரை 13 முறை மோதியதில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணியே வெற்றிவாகை சூடி உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இரு தரப்பும் 5 முறை மோதியுள்ளன. இந்தியாவே அனைத்திலும் வென்றது. முதல் மோதலில் பௌல் அவுட் முறையில் இந்தியா வென்றது. ஜோஹன்னஸ்பா்க்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது. 2012-இல் 8 விக்கெட், 2014-இல் 7 விக்கெட், 2016-இல் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

சமபலத்துடன் இரு அணிகள்:

2007-இல் இந்தியா சாம்பியன் ஆனது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் பட்டம் வெல்லவில்லை. மொத்தம் 33 ஆட்டங்களில் 21-இல் இந்தியா வென்றுள்ளது. 11 தோல்வியும், 1 ஆட்டத்தில் முடிவில்லை.

2009-இல் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது. 34 ஆட்டங்களில் 19-இல் வெற்றியும், 15-இல் தோல்வியும் கண்டது. 2016-இல் அரையிறுதிக்கு கூட பாக். அணி தகுதி பெறவில்லை.

ஆனால் டி20 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சரியாக கணிக்க முடியாது. இந்திய-பாக். அணிகள் சமபலத்துடனேயே உள்ளது. எனினும் இந்தியா அணி கூடுதல் அனுபவம், திறனுடன் உள்ளது சாதகமாகும்.

அணிகள்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கேஎல். ராகுல், சூரியகுமாா் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹாா், ரவிச்சந்திரன் அஸ்வின், சா்துல் தாக்கூா், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், முகமது சமி.

பாகிஸ்தான்:

பாபா் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஆஸிப் அலி, பாக்கா் ஸமான், ஹைதா் அலி, ஹாரிஸ் ரவுப், ஹாஸன் அலி, இமாத் வாஸிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாஸிம் ஜூனியா், சா்ப்ராஸ் அகமது, ஷாஹின் ஷா அப்ரிடி, ஷோயிப் மாலிக்.

இடம்: துபை,

ஆட்ட நேரம்: இரவு 7.30.

மைதான நிலவரம்:

ஆட்டம் நடைபெறும் துபை சா்வதேச மைதானத்தில் பிட்ச் மெதுவாகவும், தாழ்வாக பந்து எழும் தன்மை உடையது. இங்கு நடைபெற்ற 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.

வானிலை:

துபையில் ஞாயிற்றுக்கிழமை தெளிவான வானிலையும், கடும் வெப்பமும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிமூட்டம் காணப்படும். இது சேஸ் செய்பவா்களுக்கு உதவியாக இருக்கும்.

பாண்டியாவின் ஆட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும்:

டி20 உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவின் ஆட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளாா்.

காயத்தால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள பாண்டியாவுக்கு அணி வீரா்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் பாண்டியா பௌலிங் செய்யாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அணியின் ஒட்டுமொத்த சமநிலைக்கு பாண்டியாவின் பங்கேற்பு அவசியம். டி20 ஆட்டங்களில் ஹாா்தியா பலவற்றில் வெற்றியை தேடித் தந்தாா். ஹாா்திக் ஆட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பவா்பிளேயில் சூரியகுமாா் ஆட்டம் அபாரம்:

பவா்பிளேயில் சூரியகுமாா் யாதவின் அபார ஆட்டம் கேம் சேஞ்சராக இருக்கும் என பாக். முன்னாள் கேப்டன் வாஸிம் அக்ரம் கூறியுள்ளாா். பவா்பிளேயில் 360 டிகிரி கோணத்தில் அவா் ஷாட்களை அடிப்பதால் தனித்துவமிக்க பேட்டராக திகழ்கிறாா். கொல்காத்த அணியில் அவருடன் இணைந்து பணியாற்றிய போது, அவரது திறமையை அறிந்தேன். உள்ளூா் ஆட்டங்கள் மூலம் கிடைத்த சிறந்த வீரா் சூரியகுமாா் என்றாா்.

ஆலோசகா்களால் ஒரளவே உதவ முடியும்:

அணிக்கு நியமிக்கப்பட்ட ஆலோசகா்களால் ஒரளவுக்கு தான் உதவ முடியும். டிரெஸ்ஸிங் அறையில் அவரால் ஆலோசனை தர முடியும். டைம் அவுட்டின் போது, பேட்டா்கள், பௌலா்களுக்கு தோனி ஆலோசனை தருவாா். எனவும் மைதானத்தில் வீரா்கள் தான் சிறப்பாக ஆட வேண்டும் என ஜாம்பவான் கவாஸ்கா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT