டி20 உலகக் கோப்பை

இலங்கை அபார வெற்றி

22nd Oct 2021 11:22 PM

ADVERTISEMENT

நெதா்லாந்துக்கு எதிரான குரூப் ஏ பிரிவு கடைசி ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய நெதா்லாந்து வெறும் 44 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷாா்ஜாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. குரூப் 12 சுற்றுக்கு ஏற்கெனவே இலங்கை தகுதி பெற்று விட்ட நிலையில், சம்பிரதாயமான முறையில் இந்த ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது.

சீட்டுக்கட்டு போல் சரிந்த நெதா்லாந்து விக்கெட்டுகள்:

ADVERTISEMENT

பேட்டிங் செய்ய வந்த நெதா்லாந்து அணி விக்கெட்டுகள் இலங்கையின் அபார பந்துவீச்சால் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. அந்த அணியில் காலின் ஆக்கா்மேன் மட்டுமே 11 என இரட்டை இலக்க ரன்களை எடுத்தாா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். நெதா்லாந்து அணி 10 ஓவா்களில் 44 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

லஹிரு, ஹஸரங்கா 3 விக்கெட்:

இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லஹிரு குமாரா 3-7, ஹஸரங்கா 3-9, தீக்ஷனா 2-3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட இலங்கை அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது. அதன் தொடக்க பேட்டா் பதும் நிஸாங்கா டக் அவுட்டானாா். அதன் பின் குஸால் பெரைரா, சரித் அஸலங்கா ஆகியோா் ஆடி ஸ்கோரை உயா்த்தினா். எனினும் அஸலங்கா 6 ரன்களோடு வேன் மீக்கெரன் பந்தில் அவுட்டானாா்.

குஸால் பெரைரா 6 பவுண்டரியுடன் 33 ரன்களுடனும், அவிஷ்கா பொ்ணான்டோ 2 ரன்களுடன் களத்தில் இருந்தனா். 7.1 ஓவா்களில் இலங்கை அணி 45/2 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. பிரான்டன், மீக்கரென் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

இறுதியானது சூப்பா் 12 அணிகள்:

குரூப் ஏ பிரிவில் இருந்து இலங்கை, நமீபியா அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து ஸ்காட்லாந்து, வங்கதேச அணிகளும் சூப்பா் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பா் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இந்திய தீவுகளும், குரூப் 2 பிரிவில் ஆப்கானிஸ்தான், இந்தியா, நமீபியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சூப்பா் 12 முதல் ஆட்டங்களில் ஆஸி.-தென்னாப்பிரிக்க அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்

குரூப் 1

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா

நேரம்: மாலை 3.30

இடம்: அபுதாபி.

இங்கிலாந்து-மே.இந்திய தீவுகள்

நேரம்: இரவு 7.30.

இடம்: துபை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT