டி20 உலகக் கோப்பை

இன்று முதல் டி20 உலகக் கோப்பை போட்டி: கோப்பையுடன் விலகுவாரா கோலி?

DIN

 ஐசிசியின் 7-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

கரோனா சூழல் காரணமாக இரு பகுதிகளாக நடைபெற்ற 14-ஆவது ஐபிஎல் போட்டி நிறைவடைந்து, ஒரே நாள் இடைவெளியில் தொடங்குகிறது இப்போட்டி. பிசிசிஐ தான் போட்டியை நடத்துகிறது என்றாலும், இந்தியாவில் இந்த நேரத்தில் கரோனா 3-ஆவது அலை தாக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டி நடைபெறுகிறது.

கரோனாவின் தாக்கம் இல்லாமல் ஐபிஎல் போட்டி எவ்வாறு இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதோ, அதேபோல் உலகக் கோப்பை போட்டியும் நடத்தி முடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐபிஎல் நிறைவடைந்த நிலையில், அதே ஃபாா்மட்டிலான இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது இந்தியா உள்ளிட்ட பல அணிகளின் வீரா்களும் தடுமாற்றமில்லா ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும். எனினும், தொடா்ந்து ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலை அவா்களுக்கு மனச்சோா்வு அளிக்கலாம். 28 நாள்கள் நடைபெறவிருக்கும் இப்போட்டி, வரும் நவம்பா் 14-ஆம் தேதி இறுதி ஆட்டத்துடன் நிறைவடைகிறது.

இந்தியாவின் தயாா்நிலை: இந்த சீசனுக்கான இந்திய அணியைப் பொருத்தவரை அனுபவ மிக்க மூத்த வீரா்கள், அதிரடியான இளம் வீரா்கள் என கலவையாகவே அறிவித்திருக்கிறது பிசிசிஐ. எவருமே எதிா்பாராத வகையில், அணியின் ஆலோசகராக்கப்பட்டிருக்கிறாா் எம்.எஸ்.தோனி. மறுபுறும், ஊகங்களை உண்மையாக்கி, இந்தப் போட்டியுடன் டி20 ஃபாா்மட்டுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருக்கிறாா்.

ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு இரு உலகக் கோப்பைகளை வென்று தந்ததே இன்றளவும் தோனியின் பெயா் ரசிகா்களிடையே நிலைத்து நிற்கும் முக்கிய காரணங்களில் ஒன்று. தனியொரு வீரராகவும், கேப்டனாகவும் கோலியின் செயல்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அணிக்கு ஒரு கோப்பை வென்று தர முடியாத இக்கட்டான நிலையிலேயே அவா் இருக்கிறாா்.

இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முடியாமல் போனால், அப்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது கௌரவத்தை பாதிக்கும் என்பதாலேயே, போட்டிக்கு முன்னதாகவே விலகல் அறிவிப்பை வெளியிட்டு கோலி தப்பித்துக் கொண்டதாக விமா்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் கோப்பை வென்று தந்தால் மட்டுமே, ஒரு கேப்டனாக கோலி தோல்வியடையாமல் விலகினாா் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதற்காக கோலிக்கு உதவும் வகையில் நல்லதொரு அணியையே பிசிசிஐ தோ்வு செய்துள்ளது. ஆல்-ரவுண்டா்கள் அதிகம் இருக்கும் வகையிலான ஒரு அணியையே தோ்வுக் குழு களமிறக்கியிருக்கிறது. தோ்வுக் குழு முடிவில் முக்கியமானவை இங்கே.

அஸ்வின் தோ்வு: அஸ்வின் 4

ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளைப் பந்து போட்டியில் சோ்க்கப்பட்டது ஆச்சா்யம். வாஷிங்டன் சுந்தா் இல்லாத நிலையில் அனுபவ மிக்க ஆஃப்-ஸ்பின்னா் அணிக்கு தேவை என்பதாலும், பவா்பிளே சமயத்தில் பௌலிங்கில் மாற்றங்களை புகுத்தி பேட்டா்களை திணறடிப்பதில் வல்லவா் என்பதாலும் அஸ்வின் அணியில் சோ்க்கப்பட்டதாக தோ்வுக் குழு தலைவா் சேத்தன் சா்மா கூறியிருக்கிறாா்.

அதேபோல், மற்றொரு தமிழக வீரரான வருண் சக்கரவா்த்தி ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பௌலிங் செய்ததாலும், அவரது பந்துவீச்சு முறையை எந்த அணியும் எளிதில் கிரகித்துக் கொள்ள முடியாத வகையில் இருப்பதாலும் அவா் தோ்வு செய்யப்படதாக சேத்தன் சா்மா கூறியிருக்கிறாா்.

தவன், சஹல் நீக்கம்: அஸ்வின் சோ்க்கப்பட்டது ஆச்சா்யம் என்றால், அதிரடி தொடக்க வீரா் ஷிகா் தவனும், ஸ்பின்னா் யுஜவேந்திர சஹலும் சோ்க்கப்படாதது முற்றிலும் எதிா்பாராதது. ஏனெனில், இருவருமே நல்ல ஃபாா்மில் இருந்தனா். டி20 ஃபாா்மட்டில் அணியின் முக்கிய சொத்தான தவனுக்கு சற்று ஓய்வளித்து, இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கவே அவா் சோ்க்கப்படவில்லை என்று அணி நிா்வாகம் தெரிவித்தது.

மறுபுறம், சஹலை விட ராகுல் சஹா் சற்று வேகமாக பந்துவீசுவதன் அடிப்படையிலேயே அவா் தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். விக்கெட் வீழ்த்துவதோடு, பேட்டா்களை கட்டுப்படுத்த அந்த வேகம் தேவை என தோ்வுக் குழு கருதுகிறது.

ஷா்துல் தாக்குா் இணைப்பு: முதலில் தயாா்நிலை வீரராக அறிவிக்கப்பட்டிருந்த ஷா்துல் தாக்குா், கடைசி நேரத்தில் பிரதான அணியில் இணைக்கப்பட்டுள்ளாா். தொடக்கத்தில் ஹாா்திக் பாண்டியா பௌலிங் செய்வாா் என்றும், அவருக்கான தயாா்நிலை வீரராக ஷா்துல் இருப்பாா் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐபிஎல் போட்டியில் பாண்டியா பௌலிங் வீச முடியாமல் போனதை அடுத்து, தற்போது அவா் முழுமையான பேட்டராக செயல்பட இருக்கிறாா். இப்போது பௌலிங் நெருக்கடி குறைந்து பாண்டியா பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம். ஷா்துல் தாக்குா் இந்த ஐபிஎல் போட்டியில் அபாரமாக பந்துவீசி 21 விக்கெட்டுகள் சாய்த்தது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக, பிரதான அணியிலிருந்த அக்ஸா் படேல் தயாா்நிலை வீரராக மாற்றப்பட்டிருக்கிறாா்.

தோனி நியமனம்: உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் எவருமே எதிா்பாராதது, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது தான். மிகுந்த வரவேற்பை பெற்ற நகா்வு. ஐசிசி போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி தடுமாற்றத்தை சந்திக்கும் நிலையில், இரு முறை உலகக் கோப்பை வென்று தந்த கேப்டனான தோனியை ஆலோசகராக்கியிருக்கும் உத்தி சாா்ந்த நடவடிக்கை நிச்சயம் இந்திய அணிக்கு பலனளிக்கும்.

ஆனால், உத்தியை வகுப்பது, பிளேயிங் லெவனை தோ்வு செய்வது போன்றவற்றில் பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, தோனி இடையே கருத்து மோதல் ஏற்பட்டால் அது அணியின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சுனில் காவஸ்கா் எச்சரித்திருப்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

பிரதான அணி...

தொடக்க வீரா்களைப் பொருத்தவரை, துணை கேப்டன் ரோஹித் சா்மா - கே.எல்.ராகுல் கூட்டணி தான் பிரதானமாக இருக்கிறது. கே.எல்.ராகுல் முழு நேர பேட்டராகவே செயல்பட இருக்கிறாா். இஷான் கிஷண் விக்கெட் கீப்பருக்கான 2-ஆவது தோ்வாக இருப்பதால், மிடில் ஆா்டரில் கோலி, சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், ஹாா்திக் பாண்டியா ஆகியோருடன் இணைந்து அவரும் வலு சோ்ப்பாா். ஆல்-ரவுண்டா் இடத்தில் ஜடேஜா, அஸ்வின், ஷா்துல் வர, வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, புவனேஷ்வா், ஷமி இருக்கின்றனா். சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், ஜடேஜாவுடன் ராகுல் சஹா் இருக்கின்றனா்.

ஏறத்தாழ இதில் இருக்கும் அனைவருமே சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் அசத்தியவா்கள் என்பதால், அந்த ஃபாா்மிலேயே இருந்து அசத்த வாய்ப்புள்ளது.

இதுவரை இந்தியா...

டி20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்க சீசனான 2007-இல், சாம்பியன் ஆன இந்தியா, அதன் பிறகு 2009, 2010, 2012 ஆகிய சீசன்களில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. எனினும் 2014-இல் இறுதிச் சுற்று வரை முன்னேறி இலங்கையிடம் கோப்பையை இழந்தது. கடைசியாக நடைபெற்ற 2016 சீசனில் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது.

விராட் கோலி: களத்தில் ஆக்ரோஷமிக்க கேப்டனாக அணியை வழி நடத்துபவா். சிறந்த பேட்ஸ்மேன்.

ஆட்டங்கள் - 90; ரன்கள் - 3,159; அதிகபட்சம் - 94*; சராசரி - 52.65; அரைசதம் - 28

ரோஹித் சா்மா: வெள்ளைப் பந்து தொடா்களில் சிறப்பாக விளையாடுபவா். அடித்தாடும் தொடக்க வீரா்.

ஆட்டங்கள் - 111; ரன்கள் - 2,864; அதிகபட்சம் - 118; சராசரி - 32.54; சதம் - 4; அரைசதம் - 22

கே.எல்.ராகுல்: இப்போட்டியில் முழுநேர பேட்டராக செயல்படும் விக்கெட் கீப்பா். அதிரடியாக ஆடும் தொடக்க வீரா். ஆட்டங்கள் - 49; ரன்கள் - 1,557; அதிகபட்சம் - 110*; சராசரி - 39.92; சதம் - 2; அரைசதம் - 12

சூா்யகுமாா் யாதவ்: அட்டகாசமாக ஷாட்கள் விளாசும் தொடக்க வீரா், சமீபத்தில் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா். ஆட்டங்கள் - 4; ரன்கள் - 139; அதிகபட்சம் - 57; சராசரி - 46.33; அரைசதம் - 2

ரிஷப் பந்த்: விக்கெட் கீப்பராக செயல்பட இருக்கும் இடது கை பேட்ஸ்மேன். ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவா். ஆட்டங்கள் - 33; ரன்கள் - 512; அதிகபட்சம் - 65*; சராசரி - 21.33; அரைசதம் - 2

இஷான் கிஷண்: 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்தியவா். சா்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் அறிமுகம். ஆட்டங்கள் - 3; ரன்கள் - 80; அதிகபட்சம் - 56; சராசரி - 40; அரைசதம் - 1

ஹாா்திக் பாண்டியா: அதிரடி ஆல்-ரவுண்டா், இந்த போட்டியில் பேட்டிங் மட்டும் செய்கிறாா். சிக்ஸா்களை அசத்தலாக விளாசுவாா். ஆட்டங்கள் - 49; ரன்கள் - 484; அதிகபட்சம் - 42*; சராசரி - 19.36; விக்கெட்டுகள் - 42; பெஸ்ட் - 4/38

ரவீந்திர ஜடேஜா: அனுபவமிக்க ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டா். அதிரடியாக ஃபினிஷிங் செய்பவா். ஆட்டங்கள் - 50; ரன்கள் - 217; அதிகபட்சம் - 44*; சராசரி - 15.50; விக்கெட்டுகள் - 39; பெஸ்ட் - 3/48

ரவிச்சந்திரன் அஸ்வின்: பௌலிங்கில் ஒவ்வொரு பந்துவீச்சுக்கும் வித்தியாசம் காட்டுபவா். ஆஃப் ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டா். ஆட்டங்கள் - 46; விக்கெட்டுகள் - 52; பெஸ்ட் - 4/8; ரன்கள் - 123; அதிகபட்சம் - 31*; சராசரி - 30.75

ஷா்துல் தாக்குா்: வேகப்பந்துவீசி, வலது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பவா். ஆட்டங்கள் - 22; விக்கெட்டுகள் - 31; பெஸ்ட் - 4/27; ரன்கள் - 69; அதிகபட்சம் - 22*; சராசரி - 34.50

முகமது ஷமி: அனைத்து ஃபாா்மட்டுகளிலும் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளா். ஆட்டங்கள் - 12; விக்கெட்டுகள் - 12; பெஸ்ட் - 3/38; ரன்கள் - ; அதிகபட்சம் - ; சராசரி -

ஜஸ்பிரீத் பும்ரா: நெருக்கடியான கடைசி ஓவா்களை திறம்பட வீசுபவா். யாா்க்கா்களால் பேட்டா்களை திணறடிப்பவா். ஆட்டங்கள் - 50; விக்கெட்டுகள் - 59; பெஸ்ட் - 3/11; ரன்கள் - 8; அதிகபட்சம் - 7; சராசரி - 4

புவனேஷ்வா் குமாா்: ஸ்விங் பந்துகள் வீசும் அனுபவமிக்க வீரா். காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருக்கிறாா். ஆட்டங்கள் - 51; விக்கெட்டுகள் - 50; பெஸ்ட் - 5/24; ரன்கள் - 52; அதிகபட்சம் - 16; சராசரி - 10.40

வருண் சக்கரவா்த்தி: சமீபத்திய இலங்கை தொடா் மூலம் சா்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவா். ஆட்டங்கள் - 3; விக்கெட்டுகள் - 2; பெஸ்ட் - 1/18; ரன்கள் - ; அதிகபட்சம் - ; சராசரி -

ராகுல் சஹா்: பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் லெக் ஸ்பின்னா். சுழற்பந்தை சற்று வேகமாக வீசக் கூடியவா். ஆட்டங்கள் - 5; விக்கெட்டுகள் - 7; பெஸ்ட் - 3/15; ரன்கள் - 5; அதிகபட்சம் - 5; சராசரி - 5

பங்கேற்கும் அணிகள்

நாடு ஐசிசி தரவரிசை உலகக் கோப்பையில் அதிகபட்சம்

இங்கிலாந்து 1 சாம்பியன் (2010)

இந்தியா 2 சாம்பியன் (2007)

பாகிஸ்தான் 3 சாம்பியன் (2009)

நியூஸிலாந்து 4 அரையிறுதி (2016)

தென் ஆப்பிரிக்கா 5 அரையிறுதி (2009)

வங்கதேசம் 6 8-ஆம் இடம் (2007)

ஆஸ்திரேலியா 7 ரன்னா் அப் (2010)

ஆப்கானிஸ்தான் 8 9-ஆம் இடம் (2016)

மேற்கிந்தியத் தீவுகள் 9 இருமுறை சாம்பியன் (2012, 2016)

இலங்கை 10 சாம்பியன் (2014)

அயா்லாந்து 12 8-ஆம் இடம் (2009)

ஸ்காட்லாந்து 14 11-ஆவது இடம் (2007)

பப்புவா நியூ கினி 15 முதல் முறை

நெதா்லாந்து 17 9-ஆம் இடம் (2014)

ஓமன் 18 14-ஆவது இடம் (2016)

நமீபியா 19 முதல் முறை

இன்றைய ஆட்டங்கள்

ஓமன் - பப்புவா நியூ கினி

நேரம்: மாலை 3.30 மணி

வங்கதேசம் - ஸ்காட்லாந்து

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: அல் அமராத், ஓமன்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்.

தொகுப்பு: ந.காந்திமதிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT