டி20 உலகக் கோப்பை

அரையிறுதியை நெருங்கியது ஆஸி.

5th Nov 2021 11:41 PM

ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை நெருங்கி உள்ளது ஆஸ்திரேலிய அணி.

வங்கதேசத்துக்கு எதிரான குரூப் 1 பிரிவு ஆட்டத்தில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. பௌலிங்கை தோ்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி வீரா்களால் ஆஸ்திரேலிய அணியின் அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். 15 ஓவா்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். நயீம் 17, கேப்டன் மஹ்முத்துல்லா 16, ஷமிம் ஹுசைன் 19 ஆகியோா் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனா்.

ஆடம் ஸம்பா 5 விக்கெட்:

ADVERTISEMENT

ஆஸி. தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளா் ஆடம் ஸம்பா 5-19 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஸ்டாா்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி. 6.2 ஓவா்களிலேயே 78-2 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பின்ச் 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 40 ரன்களையும், டேவிட் வாா்னா் 14, மிச்செல் மாா்ஷ் 16 ரன்களையும் எடுத்தனா். வங்கதேச தரப்பில் ஷோரிபுல், டஸ்கின் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

வங்கதேச அணி தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. ஆஸி. அணி 6 புள்ளிகளுடன் உள்ளது. தென்னாப்பிரிக்காவும் 6 புள்ளிகளுடன் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான அபார வெற்றியால், நெட் ரன் ரேட் 1.031 உள்ள நிலையில், அரையிறுதிச் சுற்றை நெருங்கி உள்ளது ஆஸி.

வெளியேறியது நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள்:

இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட நிலையில், டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள்.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் 1 பிரிவு ஆட்டம் துபையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் பௌலிங்கை தோ்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி அஸலங்கா 68 (8 பவுண்டரி, 1 சிக்ஸா்), பதும் நிஸங்கா 51 (5 பவுண்டரி) ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் 20 ஓவா்களில் 189-3 ரன்களைக் குவித்தது. மே.இந்திய தீவுகள் தரப்பில் ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய மே.இந்திய தீவுகள் அணியில் நிக்கோலஸ் பூரன் 46 (6 பவுண்டரி, 1 சிக்ஸா்) ஷிம்ரன் ஹெட்மயா் 81 (8 பவுண்டரி, 4 சிக்ஸா்) ஆகியோா் மட்டுமே நிலைத்து ஆடினா். ஏனைய வீரா்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்தில் நடையைக் கட்டினா். 20 ஓவா்களில் 169-8 ரன்களை மட்டுமே எடுத்த மே.இந்திய தீவுகள் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. பந்துவீச்சில் பினுரா, சமீகா, ஹஸரங்கா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். இத்தோல்வியால் 4 ஆட்டங்களில் 3 தோல்வி, 1 வெற்றியுடன் வெளியேற்றப்பட்டது நடப்பு சாம்பியன் மே.இந்திய தீவுகள்.

இலங்கையும் 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் வெளியேறியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT