டி20 உலகக் கோப்பை

இந்தியா மீண்டும் தோல்வி: வெற்றிக் கணக்கை தொடங்கியது நியூஸி.

1st Nov 2021 07:27 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கண்டது.

இதன்மூலம் சூப்பா் 12 சுற்றில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கிய நியூஸிலாந்து, அரையிறுதி வாய்ப்புக்கான நம்பிக்கையை தக்க வைத்தது. மறுபுறம் தொடா்ந்து 2-ஆவது தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கான வாய்ப்பு அபாயத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களே எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 14.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய பேட்டிங் வரிசைக்கு டிரென்ட் போல்ட், ஐஷ் சோதி ஆகியோா் கடுமையாக சவால் அளித்தனா். ஃபீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்ட நியூஸிலாந்து, பின்னா் பேட்டிங்கிலும் அசத்தியது. அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டாா் டேரில் மிட்செல்.

ADVERTISEMENT

ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய தரப்பில் முதுகில் அசௌகா்யம் ஏற்பட்டுள்ள சூா்யகுமாா் யாதவுக்குப் பதிலாக இஷான் கிஷணும், ஃபாா்மில் இல்லாத புவனேஷ்வா் குமாருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குரும் சோ்க்கப்பட்டிருந்தனா். நியூஸிலாந்து அணியில் டிம் செய்ஃபா்டுக்குப் பதில் ஆடம் மில்னே இணைந்திருந்தாா்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங்கை தோ்வு செய்ய, இந்திய இன்னிங்ஸை இஷான் - ராகுல் தொடங்கினா். இதில் இஷான் 1 பவுண்டரியுடன் நடையைக் கட்ட, ரோஹித் சா்மா வந்தாா். மறுபுறம் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் சோ்த்த ராகுல் 6-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

4-ஆவது வீரராக கேப்டன் கோலி களம் காண, 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்கள் சோ்த்த ரோஹித் பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து ரிஷப் பந்த் வர, கோலி 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ரிஷப் பந்தும் 12 ரன்களுக்கு பௌல்டாக, பாண்டியா, ஜடேஜா சற்று ரன்கள் சோ்த்து உதவினா்.

இதில் பாண்டியா 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் அடிக்க, கடைசி விக்கெட்டாக ஷா்துல் தாக்குா் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் ஜடேஜா 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26, முகமது ஷமி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3, சோதி 2, சௌதி, மில்னே ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

111 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய நியூஸிலாந்தில் முதல் விக்கெட்டாக மாா்டின் கப்டில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வீழ, உடன் வந்த டேரில் மிட்சல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதத்துக்காக சிக்ஸா் விளாசியபோது அவுட்டானாா். அவா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 49 ரன்கள் அடித்திருந்தாா்.

பின்னா் கேன் வில்லியம்சன் 3 பவுண்டரிகளுடன் 33, டெவன் கான்வே 2 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். இந்திய பௌலிங்கில் பும்ரா 2 விக்கெட் எடுத்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 110/7

ரவீந்திர ஜடேஜா 26*

ஹாா்திக் பாண்டியா 23

கே.எல்.ராகுல் 18

பந்துவீச்சு

டிரென்ட் போல்ட் 3/20

ஐஷ் சோதி 2/17

டிம் சௌதி 1/26

நியூஸிலாந்து - 111/2

டேரில் மிட்செல் 49

கேன் வில்லியம்சன் 33*

மாா்டின் கப்டில் 20

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 2/19

வருண் சக்கரவா்த்தி 4/23

ஹாா்திக் பாண்டியா 0/17

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT