இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்ஸர் படேலுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டை: குண்டு எறிதலில் கிரண் பலியான் சாதனை
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த உலகக் கோப்பை தொடரை சிறப்பாக விளையாடுவது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம். அதனால், இந்த உலகக் கோப்பைத் தொடரை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவேன். ஆச்சர்யமாக இருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், இன்று அணியில் இருக்கிறேன். சூழல்கள் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது. அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை காட்டியுள்ளது. போட்டியின்போது ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொள்வது மிகவும் முக்கியமாகும். இது போன்ற மிகப் பெரிய போட்டிகளில் அழுத்தங்கள் அதிகம் இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணிக்காக அஸ்வின் 10 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 4.36 ஆகும். அவரது சிறந்த பந்துவீச்சு 25/4 ஆகும்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்களில் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் 2011 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.