செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

27th Sep 2023 07:00 PM

ADVERTISEMENT

உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பேசியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இதையும் படிக்க: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா?

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்க நிறைய தெரிவுகள் இருக்கின்றன. ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் களமிறங்குகிறார்கள். இதுபோன்ற ஆரோக்கியமான போட்டி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர உதவும். ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான வீரர். அவர் உண்மையில் சிறப்பாக விளையாடுகிறார். அவர் மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் பேட் செய்து ஒவ்வொரு முறையும் அணிக்காக பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார். அவரால் ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவரை விடுத்து மற்றொரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்வது கடினமான ஒன்று. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் அடுத்து இடக்கை பேட்ஸ்மேனான இஷான் கிஷன் சிறப்பாக விளையாடுகிறார். இருப்பினும், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என நான் நினைக்கிறேன். 

ADVERTISEMENT

அஸ்வின் போன்ற வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். அவர் வெவ்வேறு விதங்களில் பந்துவீசுவதால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது எதிரணிக்கு சவாலான காரியமாக இருக்கும். உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அணியில் அக்ஸர் படேல் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது தற்போது கேள்விக் குறியாக உள்ளது. இரண்டு இடக்கை சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் பதில் அஸ்வினை அணியில் எடுக்கலாம். அவர் நன்றாக பேட் செய்யும் திறனும் கொண்டவர். ஷர்துல் தாக்குர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், முகமது ஷமி அளவுக்கு அவர் செயல்படவில்லை. அதனால் பிளேயிங் லெவனில் ஷமி இடம்பெற வேண்டும்.  முகமது ஷமி இந்தியாவுக்கு தேவையான தருணங்களில் சிறப்பாக பேட்டிங்கும் செய்துள்ளார். அணியில் ஹார்திக் பாண்டியா இருக்கும்போது ஷர்துல் இடம்பெற வேண்டியதில்லை. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிக முக்கிய வீரராக ஷுப்மன் கில் இருப்பார். மற்ற வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்திய அணிக்கு ஷுப்மன் கில் சிறந்த தொடக்கத்தை அமைத்துத் தந்தால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமானதாக மாறும். 

இதையும் படிக்க: கடைசி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு!

இந்தியா மீது மிகுந்த அழுத்தம் இருக்கும். ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. அதனால் இந்த முறை கோப்பையை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் இந்தியாவின் மீது அதிகமாகவே இருக்கும். அழுத்தம் அதிகம் இருக்கும் என்பது இந்திய வீரர்களுக்கும் தெரியும்.  இந்த உலகக் கோப்பை மிகுந்த போட்டி நிறைந்ததாக இருக்கப் போகிறது. இந்தியாவிடம் மிகச் சிறந்த அணி இருக்கிறது. உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதால் மைதானம் முழுவதும் இந்திய அணிக்கு பெருமளவில் ஆதரவு இருக்கும். இந்திய அணிக்கு ஹைதராபாத்தில் எந்த ஒரு போட்டியும் இல்லை. இந்திய அணி ஹைதராபாத்தில் விளையாடியிருந்தால் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். இந்த விஷயம் குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT