காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து வீரர் டிம் சௌதிக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது கேட்ச் பிடிக்க முயற்சித்து வலது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா?
இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி இணைய உள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் நியூசிலாந்து அணி நிர்வாகம் கூறியிருப்பதாவது: வலது கை கட்டை விரல் காயத்திலிருந்து டிம் சௌதி குணமடைந்து வருவதால் அவர் நியூசிலாந்து அணியுடன் இந்தவார இறுதியில் இணையவுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருடன் நியூசிலாந்து அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசனும் இணையவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சர்வதேச டி20-ல் 314 ரன்கள்! நேபாளம் படைத்த உலக சாதனைகள் என்னென்ன?
உலகக் கோப்பைத் தொடரின் முதன்மையான போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.