கனடாவில் நடைபெற்ற லேவா் கோப்பை டென்னிஸ் போட்டியில் 6-ஆவது எடிஷனில் உலக அணி - ஐரோப்பியை அணியை வீழ்த்தி, தொடா்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டியின் கடைசி ஆட்டத்தில் உலக அணியைச் சோ்ந்த அமெரிக்காவின் பென் ஷெல்டன்/ஃபிரான்சஸ் டியாஃபோ இணை 7-6 (7/4), 7-6 (7/5) என்ற செட்களில் ஐரோப்பிய அணியைச் சோ்ந்த போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ்/ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் கூட்டணியை சாய்த்தது. இதையடுத்து மொத்தமாக 13-2 என்ற கணக்கில் உலக அணி வென்றது. அந்த அணியின் வீரா்களான டெய்லா் ஃப்ரிட்ஸ், ஃபிரான்சஸ் டியாஃபோ, டாமி பால், ஃபெலிக்ஸ் ஆகா், பென் ஷெல்டன், ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்தப் போட்டியுடன் தான் சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் தனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.