ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 5 சதங்கள் விளாசிய 7-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று (செப்டம்பர் 24) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 97 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஷுப்மன் கில்லின் நேற்றைய சதம் ஒருநாள் போட்டிகளில் அவரது 6-வது சதமாகும். அதேபோல இந்த ஆண்டில் (2023) மட்டும் ஷுப்மன் கில் 5 சதங்களை விளாசியுள்ளார்.
இதையும் படிக்க: 3000 சிக்ஸர்கள் விளாசிய முதல் அணி இந்தியா: மற்ற அணிகளின் சிக்ஸர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா?
இதன்மூலம், ஓராண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 7-வது நபராக அவர் இணைந்துள்ளார். ஷுப்மன் கில்லுக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 5 சதங்கள் விளாசி சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதல் ஆறு இடங்களில் உள்ளனர்.
23 வயதாகும் ஷுப்மன் கில் இந்த ஆண்டில் மட்டும் 5 சதங்களை விளாசியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்களையும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு சதத்தினையும் அவர் இந்த ஆண்டில் விளாசியுள்ளார்.
இதையும் படிக்க: அக்ஷர் படேல் விலகல்: 3வது ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களுக்கு ஓய்வு!
இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 1,917 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 66.1 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 102.84. ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 208 என்பது குறிப்பிடத்தக்கது.