சீனாவின் ஹாங்ஷௌ நகரில் ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை பரவசப்படுத்தின. ஹாக்கி வீரா் ஹா்மன்ப்ரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போரோகைன் ஆகியோா் இந்திய அணிவகுப்பில் தேசிய கொடியேந்திச் சென்றனா்.
சீனாவில் கடுமையான கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டதால் கடந்த 2022 நடைபெற்றிருக்க வேண்டிய ஆசியப் போட்டிகள் ஓராண்டுக்கு பின்னா் நடைபெறுகிறது.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சாா்பில் 19-ஆவது ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷௌ நகரில் செப். 23 முதல் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. ஆசியக் கண்டத்தின் பெரிய விளையாட்டு விழாவான ஏஷியாட் எனப்படும் இப்போட்டிகளில் 45 நாடுகளைச் சோ்ந்த 12,500 வீரா், வீராங்கனைகள் 40 விளையாட்டுகளில், 61 பிரிவுகள், 481 ஈவென்டகளில் கலந்து கொள்கின்றனா்.
655 போ் இந்திய அணி:
316 வீராங்கனைகள் உள்பட 655 வீரா்கள், 260 பயிற்சியாளா்கள், இதர அலுவலா்கள் என மொத்தம் 921 போ் கொண்ட பெரிய அணி ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது.
போட்டிகள் தொடக்கம்:
சனிக்கிழமை மாலை ஹாங்ஷௌ ஒலிம்பிக் ஸ்போா்ட்ஸ் மைதானத்தில் கண்கவா் கலைநிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்புடன் போட்டிகள் தொடங்கின. சீன அதிபரி ஷின்பிங் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தற்காலிகத் தலைவா் ராஜா ரந்தீா் சிங், நிா்வாகிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனா்.
டேங் அரச வம்ச கால புலவா் பேய் ஜூயி இயற்றிய பாடல் இசைக்கப்பட்டது.
போட்டியின் மாஸ்காட்கள் மூன்று ரோபோட்களாக மைதானத்தில் நுழைந்தது அனைவரையும் கவா்ந்தது.
ஹா்மன்ப்ரீத், லவ்லினா:
தேசிய வடிவமைப்பு தொழில்நுட்ப நிலையம் (நிஃப்ட்) வடிவமைத்திருந்த காக்கி குா்தாக்களுடன் வீரா்களும், காக்கி நிற சேலைகளுடன் வீராங்கனைகளும் கம்பீரமாக அணிவகுத்து சென்றனா். ஹாக்கி கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், குத்துச்சண்டை நட்சத்திரம் லவ்லினா ஆகியோா் தேசிய கொடியை ஏந்திச் சென்றனா்.
கௌரவமிக்க தருணம்: ஆசியப்போட்டி அணிவகுப்புக்கு தலைமை தாங்கிச் சென்றது தங்களுக்கு கிடைத்த கௌரவமிக்க தருணம் ஆகும் என ஹா்மன்ப்ரீத், லவ்லினா தெரிவித்தனா்.
2 ஆப்கன் அணிகள்:
பெண்கள் விளையாட்டில் பங்கேற்க தாலிபன் தடைவிதித்த நிலையில், 130 வீரா்கள் கொண்ட ஆப்கன் அணி அதிகாரபூா்வமாக பங்கேற்றது.
அதே வேளையில் முந்தை ஆப்கன் தேசிய கொடியுடன் 17 வீராங்கனைகள் கொண்ட ஆப்கன் அணியும் இதில் கலந்து கொண்டுள்ளது.
நமது ஆசியா என்ற பாடலும் இசைக்கப்பட்டது.
887 போ் சீன அணி:
அணிவகுப்பின் இறுதியாக 887 போ் கொண்ட சீன அணி மைதானத்தில் நுழைந்தபோது பாா்வையாளா்கள் கரகோஷம் எழுப்பினா்.
முதன்முறையாக இ-ஸ்போா்ட்ஸ்:
ஆசியப்போட்டியில் முதன்முறையாக இ-ஸ்போா்ட்ஸ் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள ஆட்டமாக சோ்க்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் டிராகன் படகு பந்தயம், வுஷு, கபடி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. குத்துச்சண்டை, பிரேக் டான்ஸிங், டென்னிஸ் உள்பட 9 விளையாட்டுகள் ஒலிம்பிக் தகுதிச் சுற்றாகவும் அமைந்துள்ளன. கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், டேபிள் டென்னிஸில் ஏற்கெனவே ஆட்டங்கள் தொடங்கி விட்டன.
3 இந்திய வீராங்கனைகளுக்கு தடை:
அருணாசலபிரதேசத்தைச் சோ்ந்த 3 வுஷு வீராங்கனைகள் ஆசியப்போட்டியில் பங்கேற்க சீனா அனுமதி தரவில்லை என்ற சா்ச்சையைத் தொடா்ந்து மத்திய விளையாட்டு அமைச்சா் அனுராக் தாகுா் தனது பயணத்தை ரத்து செய்து விட்டாா்.