வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பிளண்டல் 66 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். வங்கதேச தரப்பில் மஹேதி ஹாசன் மற்றும் காலித் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஸ்தஃபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ஹாசன் முகமது மற்றும் நசும் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஓபனிங், மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் களமிறங்கினர். கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தமிம் இக்பால் 58 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மஹ்மதுல்லாவைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. மஹ்மதுல்லா 76 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் 41.1 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஈஷ் சோதி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும், ஃபெர்க்யூசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: சீனாவில் கோலாகலமாகத் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள்!
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.