வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மழை காரணத்தினால் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: பிளேயிங் லெவனில் இல்லையெனில் குறைவாக உணரக் கூடாது: முகமது ஷமி
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் வில் யங் களமிறங்கினர். வில் யங் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஃபின் ஆலன் 12 ரன்களிலும், சாட் பௌஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் டாம் பிளண்டல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஹென்றி நிக்கோல்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ரச்சின் ரவீந்திரா (10 ரன்கள்), ஈஷ் சோதி (35 ரன்கள்), கைல் ஜேமிசன் (20 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக டாம் பிளண்டல் 66 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில் 49.2 ஓவர்களில் 254 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது.
வங்கதேச தரப்பில் மஹேதி ஹாசன் மற்றும் காலித் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஸ்தஃபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ஹாசன் முகமது மற்றும் நசும் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா!
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.