செய்திகள்

2-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்துக்கு 335 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

23rd Sep 2023 07:24 PM

ADVERTISEMENT

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

இதையும் படிக்க: சீனாவில் கோலாகலமாகத் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள்!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் களமிறங்கினர். அவர்கள் இருவரும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், பில் சால்ட் 28 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸாக் கிராலி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் வில் ஜாக்ஸ் மற்றும் பென் டக்கெட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பென் டக்கெட் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ் 88 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 

ADVERTISEMENT

அதன்பின் அறிமுக வீரராக களம் கண்ட சாம் ஹெயின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8  பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது.

இதையும் படிக்க: வழக்கமான காட்சிகளால் தடுமாறி நிற்கிறதா டீமன்? திரைவிமர்சனம்

அயர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிரைக் யங் 2 விக்கெட்டுகளையும், மார்க் அடாயிர், ஜோஸ்வா லிட்டில் மற்றும் பேரி மெக்கார்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்குகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT