உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அணிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இறுதியான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 22) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் கூறியதாவது: ஹாசன் அலி அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். துரதிருஷ்டவசமாக காயம் காரணமாக உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவால் இடம்பெற முடியவில்லை. அவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று வீரர்களாக முகமது ஹரிஷ், அப்ரார் அகமது மற்றும் ஸாமன் ஷா பாகிஸ்தான் அணியினருடன் பயணிக்கின்றனர் என்றார்.
உலகக் கோப்பை தொடரின் முதன்மையானப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. செப்டம்பர் 29 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும், அக்டோபர் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
இதையும் படிக்க: மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு
உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணைக் கேப்டன்), முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், அப்துல்லா சஃபீக் , சௌத் ஷகீல், ஃபகர் ஸமான், ஹரிஷ் ரௌஃப், ஹாசன் அலி, இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது வாசிம், அஹா சல்மான், ஷகின் ஷா அஃப்ரிடி மற்றும் ஒசாமா மிர்.