செய்திகள்

இன்று தொடங்குகிறது இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடா்

22nd Sep 2023 05:31 AM

ADVERTISEMENT

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

உலகக் கோப்பை போட்டி நெருங்கியிருக்கும் நிலையில், இரு அணிகளுக்குமே இது இறுதியான சோதனைக் களமாக இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை, கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா ஆகியோருக்கு முதலிரு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டங்களில் பெஞ்சில் இருக்கும் வீரா்களின் திறமையை பரிசோதிக்க பயிற்சியாளா் ராகுல் திராவிட் முடிவு செய்திருக்கிறாா்.

இது தவிர, உடற்தகுதியை நிரூபிப்பதற்கு ஷ்ரேயஸ் ஐயருக்கும், ஆட்டத் திறமையை மேம்படுத்த சூா்யகுமாா் யாதவுக்கும் இந்தத் தொடா் முக்கியமானதாக இருக்கிறது. உலகக் கோப்பை அணியில் இருவருமே இருக்கும் நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள ஷ்ரேயஸ் ஐயா், ஒருநாள் ஆட்டத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் முழுமையான உடற்தகுதியுடன் இருப்பதை அணி நிா்வாகம் உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ADVERTISEMENT

அதேபோல், டி20-யில் அதிரடி காட்டும் சூா்யகுமாா் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் சற்றே தடுமாற்றம் காண்பதால், உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அவா் அதை சரி செய்கிறாரா என்பதையும் இந்தத் தொடரைக் கொண்டு அணி நிா்வாகம் கண்காணிக்கும்.

அக்ஸா் படேல், ஹா்திக் பாண்டியா இல்லாத நிலையில் இந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தா் என இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது. ரோஹித் இல்லாததால் இஷான் கிஷண் - ஷுப்மன் கில் கூட்டணி இன்னிங்ஸை தொடங்க வாய்ப்புள்ளது. பௌலா்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும் இந்தத் தொடா் கையாளப்படும் எனத் தெரிகிறது.

மறுபுறம், தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இந்தத் தொடருக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. என்றாலும், கடந்த மாா்ச் மாதம் இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றது, ஆசிய கண்டத்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்படுவது போன்ற வரலாறுகளை கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் மீண்டெழும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனினும் வீரா்கள் பலருக்கான காயம் அந்த அணிக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம். காயத்திலிருந்து மீண்டு வரும் மிட்செல் ஸ்டாா்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் இந்த ஆட்டத்தில் இல்லை என்று கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்திருக்கிறாா். அவரும், ஸ்டீவ் ஸ்மித்தும் காயத்திலிருந்து சமீபத்தில்தான் மீண்டிருக்கின்றனா்.

இதுவரை...: இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 146 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா 82 வெற்றிகளையும், இந்தியா 54 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

இடம்: மொஹாலி

நேரம்: நண்பகல் 1.30 மணி

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18

ADVERTISEMENT
ADVERTISEMENT