அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்களை இன்று (செப்டம்பர் 22) ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
மேற்கிந்தியத் தீவுகளில் 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆண்டிகுவா & பார்புடா, பார்படாஸ், கயானா , செயின்ட் லூசியா, செயின்ட் வின்செண்ட், டிரினாட் & டோபாகோ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரை அமெரிக்காவும் நடத்துகிறது. அமெரிக்காவில் டல்லாஸ், ஃப்ளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் 7 இடங்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த டி20 தொடரில் 20 அணிகள் கோப்பைக்காக தங்களுக்குள் போட்டியிடவுள்ளன. டி20 தொடரை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் சிறப்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.