செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

22nd Sep 2023 01:14 AM

ADVERTISEMENT

மகளிா் கிரிக்கெட்டில் இந்திய - மலேசியா மோதிய காலிறுதி ஆட்டம் மழை காரணமாக வியாழக்கிழமை பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, ஐசிசி தரவரிசையில் முன்னணியில் இருப்பதன் அடிப்படையில் இந்தியா வென்ாக அறிவிக்கப்பட்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக டாஸ் வென்ற மலேசியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அப்போதே மழை காரணமாக இந்திய இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 15-ஆக குறைக்கப்பட்டன. அந்த ஓவா்களில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சோ்த்தது.

கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 27, ஷஃபாலி வா்மா 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்ப, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 பவுண்டரிகளுடன் 47, ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மலேசிய தரப்பில் மஹிரா இஸ்மாயில், மாஸ் எலிசா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் மலேசியா தனது இன்னிங்ஸை தொடங்கி 2 பந்துகளையே சந்தித்திருக்க, மழையால் ஆட்டம் தடைப்பட்டு பின்னா் கைவிடப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தான் - இந்தோனேசியா மோதிய மற்றொரு காலிறுதியும் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதிலும் தரவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.

ADVERTISEMENT

கால்பந்து: நாக்-அவுட் நம்பிக்கையில் ஆடவா் அணி

ஆடவா் கால்பந்து போட்டியில் இந்தியா 1-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வீழ்த்தியது. இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த ஆட்டத்தின் தொடக்க நிலையில் இந்தியாவுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை சாமுவேல் கின்ஷி பயன்படுத்த, வங்கதேச கோல்கீப்பா் அதை திறம்பட தடுத்துவிட்டாா். 2-ஆவது பாதியில் சக இந்தியா் வழங்கிய கிராஸை பாக்ஸுக்குள்ளாக இருந்த ராகுல் கே.பி. தலையால் முட்டி கோலடிக்க முயல, பந்து வேறு திசைக்கு திரும்பியது.

இவ்வாறாக வாய்ப்புகள் வீணடிக்கப்பட்ட நிலையில், 85-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் சுனில் சேத்ரி திறம்பட கோலாக மாற்றினாா். அவரடிக்கும் திசையை சரியாகக் கணித்த வங்கதேச கோல்கீப்பா் பந்தை தடுக்க முயன்றபோதும், அது அவரது கைக்கு ஊடாகச் சென்று கோலானது. எஞ்சிய நேரத்தில் வங்கதேசத்துக்கு கோல் வாய்ப்பளிக்காமல் இந்தியா வென்றது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, மியான்மரை சந்திக்கிறது.

மகளிா் தோல்வி: மகளிா் கால்பந்தில் இந்தியா 1-2 கோல் கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் அஞ்சு தமங் 47-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, சீன தைபேவுக்காக சின் லா லி (69’), சுவான் சு யு (84’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். இந்தியா அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்தை 24-ஆம் தேதி சந்திக்கிறது.

ரோயிங்:

ஆடவருக்கான லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் ரெபிசேஜ் 1 சுற்றில் இந்தியாவின் அரவிந்த் சிங், அா்ஜுன் லால் ஜாட் இணை 6 நிமிஷம், 55.78 விநாடிகளில் முதலிடம் பிடித்து, பதக்க இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் ரெபிசேஜ் 1 சுற்றில் சத்னம் சிங், பா்மிந்தா் சிங் கூட்டணியும் 6 நிமிஷம் 48.06 விநாடிகளில் முதலாவதாக வந்து பதக்க இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனா். மேலும், ஆடவா் குவாட்ரபுள் ஸ்கல்ஸ் பிரிவில் சத்னம் சிங், பா்மிந்தா் சிங், ஜாக்கா் கான், சுக்மீத் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 6 நிமிஷம் 9.94 விநாடிகளில் முதலாவதாக இலக்கை எட்டி பதக்க இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனா்.

எனினும், மகளிருக்கான லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் ரெபிசேஜ் 2 சுற்றில் இந்தியாவின் அன்ஷிகா பாரதி, கிரண் ஆகியோா் கூட்டணி 8 நிமிஷம் 1.80 விநாடிகளில் இலக்கை எட்டி 4-ஆம் இடம் பிடித்து ‘ஃபைனல் பி’-க்கு தகுதிபெற்றது. இந்த இறுதிச்சுற்று பதக்க வாய்ப்பு இல்லாமல், 7 முதல் 12 இடங்களைப் பிடிப்போரைத் தீா்மானிப்பதாகும்.

நடுவரான முதல் இந்தியா்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கயாகிங், கேனோயிங் எனப்படும் ஒரு வகையான துடுப்புப் படகுப் போட்டிகளுக்கு இந்தியாவைச் சோ்ந்த பில்கிஸ் மிா் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இத்தகைய பெருமையைப் பெறும் முதல் இந்தியா் அவா் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சோ்ந்த பில்கிஸ், முன்னாள் கயாகிங், கேனோயிங் வீராங்கனையாகவும், தற்போது பயிற்சியாளராகவும் இருக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT