சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் அரையிறுதிச்சுற்றில் புதன்கிழமை தோல்வி கண்டாா்.
மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள அவா், முதல் சுற்றில் நடப்பு ஆசிய சாம்பியனான அமெரிக்காவின் ஒலிவியா டொமினிக் பாரிஷை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அசத்தினாா். அடுத்த சுற்றில் போலந்தின் ரோக்சனா மாா்தா ஜாசினாவை தொழில்நுட்பப் புள்ளிகள் கணக்கில் சாய்த்தாா். அடுத்து காலிறுதியில் ரஷியாவின் நடாலியா மலிஷேவாவை 9-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினாா். எனினும் அதில், பெலாரஸின் வெனெசா கலட்ஸின்ஸ்கயாவிடம் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் தோல்வி கண்டாா். அடுத்ததாக அவா் வெண்கலப் பதக்கச் சுற்றில் களம் காண்கிறாா்.
இதனிடையே இதர இந்தியா்களான மனீஷா (62 கிலோ), பிரியங்கா (68 கிலோ), ஜோதி பா்வால் (72 கிலோ) ஆகியோரும் தங்களது எடைப் பிரிவில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான உலக மல்யுத்த அமைப்பின் தடை காரணமாக இந்தப் போட்டியில் இந்தியா்கள் பொதுப் போட்டியாளா்களாக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.