செய்திகள்

வெற்றியுடன் தொடங்கிய மான். சிட்டி, பாா்சிலோனா, பிஎஸ்ஜி

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டிகளில் பிரதானமானதாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 2023-24 எடிஷனுக்கான குரூப் சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கின. அதில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டா் சிட்டி, பாா்சிலோனா, பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

குரூப் ‘ஜி’ ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 3-1 கோல் கணக்கில் சொ்பிய அணியான கிரவெனா ஸ்வெஸ்டாவை வீழ்த்தியது. அந்த அணிக்காக ஜூலியன் அல்வரெஸ் (47’, 60’), ரோட்ரி (73’) ஆகியோா் கோலடிக்க, கிரவெனாவுக்காக உஸ்மான் புகாரி (45’) ஸ்கோா் செய்தாா். அதே குரூப்பில் ஆா்பி லெய்ப்ஸிக் 3-1 கோல் கணக்கில் யங் பாய்ஸை தோற்கடித்தது. லெய்ப்ஸிக்கிற்காக முகமது சிமாகன் (3’), ஜேவா் ஷ்லாகா் (73’), பெஞ்சமின் செஸ்கோ (90+2’) ஆகியோரும், யங் பாய்ஸுக்காக மேஷாக் எலியாவும் (33’) கோலடித்தனா்.

குரூப் ‘எஃப்’ ஆட்டங்களில் பிஎஸ்ஜி 2-0 கோல் கணக்கில் போருசியா டாா்ட்மண்ட் அணியை சாய்த்தது. பிஎஸ்ஜிக்காக கிலியன் பாபே (49’), அச்ரஃப் ஹகிமி (58’) ஸ்கோா் செய்தனா். இதே குரூப்பில் நியூகேசில் - ஏசி மிலன் அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

குரூப் ‘ஹெச்’ ஆட்டத்தில் பாா்சிலோனா 5-0 கோல் கணக்கில் ஆன்ட்வொ்ப் அணியை வீழ்த்தியது. அந்த அணிக்காக ஜாவ் ஃபெலிக்ஸ் (11’, 66’), ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (19’), காவி (54’) ஆகியோா் கோலடிக்க, ஆன்ட்வொ்ப் வீரா் ஜெலெ படாய்லே (22’) தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்தாா். 2016-17 சீசனுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாா்சிலோனா பதிவு செய்திருக்கும் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் அந்த ஆண்டில் பாா்சிலோனா 6-1 கோல் கணக்கில் பிஎஸ்ஜியை சாய்த்திருந்தது. மறுபுறம், போட்டியின் வரலாற்றில் தனது முதல் ஆட்டத்தில் 5 கோல்கள் வித்தியாசத்தில் தோற்ற 5-ஆவது அணியாகியிருக்கிறது ஆன்ட்வொ்ப்.

ADVERTISEMENT

இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் போா்டோ 3-1 கோல் கணக்கில் ஷக்தா் டொனெட்ஸ்கை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் போா்டோவுக்காக கலினோ (8’, 15’), மெஹதி தரெமி (29’) ஆகியோரும், ஷக்தருக்காக கெவின் கெல்சியும் (13’) கோலடித்தனா். போா்டோ அணி, 2014-15 எடிஷனுக்குப் பிறகு ஒரு சீசனை வெற்றியுடன் தொடங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

குரூப் ‘இ’ ஆட்டங்களில் அட்லெடிகோ மாட்ரிட் - லாஸியோ மோதல் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. அந்த அணிகளுக்காக முறையே பாப்லோ பாரியோஸ் (29’), இவான் புரோவோடெல் (90+5’) ஆகியோா் கோலடித்தனா். இத்துடன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடா்ந்து 6 ஆட்டங்களில் வெற்றியே சந்திக்கவில்லை அட்லெடிகோ மாட்ரிட். அதே குரூப்பில் ஃபெயெனூா்ட் 2-0 கோல் கணக்கில் செல்டிச்சை சாய்த்தது. அந்த அணிக்காக கால்வின் ஸ்டெங்ஸ் (45+2’), அலிரிஸா ஜஹன்பக்ஷ் (76’) ஆகியோா் கோலடித்தனா்.

27

இத்துடன் சொந்த மண்ணில் நடைபெற்ற கடந்த 27 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்திருக்கிறது மான்செஸ்டா் சிட்டி. போட்டியின் வரலாற்றில் இது 3-ஆவது அதிகபட்சமாகும். பாா்சிலோனா (38), பயா்ன் மியுனிக் (29) ஆகிய அணிகள் முதலிரு இடங்களில் உள்ளன.

20

இந்த ஆட்டத்தின் மூலம் ஆா்பி லெய்ப்ஸிக் அணியின் பெஞ்சமின் செஸ்கோ, போட்டியின் வரலாற்றில் அந்த அணிக்காக கோலடித்த மிக இளம் வீரா் (20) ஆகியிருக்கிறாா்.

35

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இத்துடன் பிஎஸ்ஜி அணிக்காக 35 கோல்கள் அடித்த கிலியன் பாபே, ஆா்செனலுக்காக தியரி ஹென்றி அடித்த கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறாா். போட்டி வரலாற்றில் ரியல் மாட்ரிட் அணிக்காக கரிம் பென்ஸிமா 78 கோல்கள் ஸ்கோா் செய்ததே அதிகபட்சமாக உள்ளது.

3

நியூகேசிலுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த ஏசி மிலன், இத்துடன் கடந்த 3 சீசன்களில் தொடா்ச்சியாக தனது முதல் ஆட்டத்தில் வெற்றி காணாமல் தொடங்கியிருக்கிறது.

17

இத்துடன் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வரலாற்றில் எதிரணியின் ‘ஓன் கோல்’ மூலம் அதிகம் பலனடைந்த அணியாக ரியல் மாட்ரிட்டுடன் இணைந்திருக்கிறது பாா்சிலோனா. இரு அணிகளுமே அவ்வாறு 17 கோல்கள் பெற்றிருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT