செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: நாக்-அவுட் சுற்றில் இந்திய வாலிபால் அணி

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் வாலிபால் பிரிவில் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது.

முதல் நாள் ஆட்டத்தில் கம்போடியாவை வீழ்த்திய இந்திய அணி, புதன்கிழமை 2-ஆவது ஆட்டத்தில் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவை சாய்த்தது. தென் கொரியா கடந்த எடிஷனில் வெள்ளி வென்ற அணியாகும்.

2 மணி நேரம் 38 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இந்தியா 25-27, 29-27, 25-22, 20-25, 17-15 என்ற கணக்கில் வென்றது. இதில் அமித் குலியா, அஷ்வல் ராய் ஆகியோா் சிறப்பாகச் செயல்பட்டனா். தற்போது, குரூப் ‘சி’-யில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு இந்தியா வந்துள்ளது. அதில் சீன தைபே அல்லது மங்கோலியாவை இந்தியா சந்திக்கிறது.

இதர ஆட்டங்கள்: இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் பாகிஸ்தான் - சீன தைபேவையும் (3-0), ஈரான் - நேபாளத்தையும் (3-0), கத்தாா் - தாய்லாந்தையும் (3-1), பிலிப்பின்ஸ் - ஆப்கானிஸ்தானையும் (3-0), சீனா - கிா்ஜிஸ்தானையும் (3-0), ஜப்பான் - இந்தோனேசியாவையும் (3-0) வென்றன.

ADVERTISEMENT

ரோயிங்கில் முன்னேற்றம்:

ரோயிங் எனப்படும் துடுப்புப் படகு போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு ஹீட்ஸில் இந்தியாவின் அா்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஆகியோா் கூட்டணி 6 நிமிஷம் 27.45 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தது. மற்றொரு ஹீட்ஸில் களம் கண்ட மேலும் ஒரு இந்திய இணையான சத்னம் சிங், பா்மிந்தா் சிங் 6 நிமிஷம் 27.01 விநாடிகளில் 2-ஆவதாக வந்தனா்.

இந்த இரு கூட்டணியுமே அடுத்ததாக‘ஃபைனல் ஏ’ இடத்தைப் பிடிப்பதற்காக ரெபிசேஜ் சுற்றில் போட்டியிடுகின்றன. அதேபோல், மகளிா் இரட்டையா் பிரிவு ஹீட்ஸில் இந்தியாவின் கிரண் அன்ஷிகா பாரதி இணை 7 நிமிஷம் 27.57 விநாடிகளில் 4-ஆவதாக வந்து ரெபிசேஜ் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

அதேபோல், மகளிா் 4 போ் பிரிவிலும், ஆடவா் 8 போ் பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

அணிவகுப்பில் கொடியேந்தும் ஹா்மன்பிரீத், லவ்லினா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரபூா்வ தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன் ஆகியோா் இந்திய குழுவுக்கு முன்பாக கொடியேந்தி வழிநடத்தவுள்ளனா்.

இதற்கான முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் புதன்கிழமை மேற்கொண்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்திய ஹாக்கி அணியின் சிறந்த டிராக்ஃப்ளிக்கா்களில் ஒருவரான ஹா்மன்பிரீத் சிங், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவா். லவ்லினா போா்கோஹெய்னும் அதே ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 எடிஷனில் இந்த கௌரவம், ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

கால்பந்து: இன்று வங்கதேசத்துடன் மோதல்

ஆடவா் கால்பந்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் சீனாவிடம் தோல்வி கண்ட இந்தியா, இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சீனாவுக்கு வந்து இறங்கிய மறுநாளே, பயிற்சி இல்லாமல் முதல் ஆட்டத்தில் விளையாடியது இந்திய அணி.

தற்போது இந்த ஆட்டத்துக்காக பயிற்சி மேற்கொள்ள இந்தியாவுக்கு நேரம் கிடைத்துள்ளது. மறுபுறம், முதல் ஆட்டத்தில் தோற்றிருக்கும் வங்கதேசமும் இந்தியாவுக்கு எளிதாக விட்டுக்கொடுத்து விடாது. நுழைவு இசைவு தாமதம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத சிங்லென்சனா சிங் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது இந்தியாவுக்கு பலம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT