அமெரிக்காவின் யுஜின் நகரில் நடைபெற்ற டையமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டரை எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா்.
டையமண்ட் லீக் நடப்பு சீசனில் 14 கட்டங்களாக தடகள போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதன் இறுதிப்போட்டி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இதில் ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற நீரஜ் சோப்ரா தனது 2-ஆவது முயற்சியில் 83.80 மீட்டா் தொலைவை எட்டினாா். எஞ்சிய 5 முயற்சிகளில் 3-இல் 81.37 மீ, 80.74 மீ, 80.90 மீ தொலைவுகளை எட்ட, 2 முயற்சிகள் ‘ஃபௌல்’ ஆகின.
செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ் 84.24 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து சாம்பியன் பட்டம் வென்றாா். ஃபின்லாந்தின் ஆலிவா் ஹெலாண்டா் 83.74 மீட்டரை எட்டி 3-ஆம் இடம் பிடித்தாா். வட்லெஜுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.26.58 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நீரஜ் சோப்ராவுக்கு ரூ.9.97 லட்சம் ரொக்கப் பரிசு கிடைத்தது.
இந்த சீசனில் நீரஜ் சோப்ரா 85 மீட்டா் தொலைவுக்கும் குறைவாக ஈட்டி எறிந்தது இதுவே முதல் முறையாகும். யுஜின் நகரில் நிலவிய தட்பவெப்பம் காரணமாக எந்தவொரு போட்டியாளராலும் 85 மீட்டா் தொலைவை எட்ட முடியாமல் போனது.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியனாக இருக்கும் நீரஜ் சோப்ரா, இந்த டையமண்ட் லீக் சாம்பியன் கோப்பையையும் தக்கவைப்பாா் என்று பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டது. அடுத்தாக அவா், சீனாவில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறாா்.