தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அா்ஜுன் பபுதா, திலோத்தமா சென் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்று, பாரீஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்றனா்.
10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் தனிநபா் பிரிவில் அா்ஜுன் 251.2 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, மற்றொரு இந்தியரான திவ்யன்ஷ் சிங் பன்வாா் 4-ஆம் இடம் (209.6) பிடித்தாா். அதிலேயே அணிகள் பிரிவில் அா்ஜுன், திவ்யன்ஷ், ஹிருதய் ஹஸாரிகா கூட்டணி 1,892.4 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.
அதில் மகளிா் தனிநபா் பிரிவில் திலோத்தமா சென் 252.3 புள்ளிகளுடன் வெள்ளியும், ரமிதா ஜிண்டால் 230.6 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா். இப்பிரிவின் அணிகள் களத்தில் திலோத்தமா, ரமிதா, ஷ்ரியங்கா சதங்கி அடங்கிய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
சீனியா் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங், தா்ஷனா ராத்தோா் கூட்டணி 40-37 என குவைத் கூட்டணியை வென்று தங்கம் தட்டிச் சென்றது. அங்கத் பாஜ்வா, பரினாஸ் தலிவால் இணை 9-ஆம் இடம் பிடித்தது. ஜூனியா் பிரிவில் ஹா்மெஹா் லாலி, ராய்ஸா தில்லன் இணை 39-29 என சீனா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ரிதுராஜ் பந்தேலா, சஞ்ஜனா சூத் ஜோடி 4-ஆம் இடம் பிடித்தது.
தற்போதைய நிலையில் இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கங்கள் பெற்றுள்ளது.