செய்திகள்

தடகளத்தில் ஒரேநாளில் 2 தங்கம் உள்பட 6 பதக்கங்கள்

4th Oct 2023 02:52 AM

ADVERTISEMENT

 

ஹாங்ஸெள: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 11ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, இந்தியாவுக்கு தடகளத்தில் 6, குத்துச்சண்டையில் 2, கேனோவில் 1 என 9 பதக்கங்கள் கிடைத்தன. இதில் தடகளத்தில் பாருல் செளதரி, அன்னு ராணி ஆகியோர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனர். தடகளத்தில் தமிழர்கள் இருவருக்கும் பதக்கம் கிடைத்துள்ளது. 


5,000 மீ. ஓட்டம்

மகளிர் 5,000 மீட்டர் ஓட்டத்தில் பாருல் செளதரி 15.14 நிமிஷங்களில் முதல் வீராங்கனையாக இலக்கை எட்டி தங்கம் வென்றார். ஜப்பான், கஜகஸ்தானுக்கு முறையே அடுத்த இரு பதக்கங்கள் கிடைத்தன. மற்றொரு இந்தியரான அங்கிதா 5ஆம் இடம் (15.33) பிடித்தார். 

ADVERTISEMENT

இந்த வெற்றியின் மூலம், ஆசிய போட்டிகளில் இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பாருல் படைத்தார். நடப்பு போட்டியில் இது அவரின் 2ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். 


ஈட்டி எறிதல் 

மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி 62.92 மீட்டரை எட்டி சீசன் பெஸ்ட்டுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தனதாக்கினார். இலங்கை, சீனா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. இதன் மூலம், ஆசிய போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்னு ராணி பெற்றார். அவர் கடந்த 2014 எடிஷனில் வெண்கலம் வென்றிருந்தார். இதற்கு முன் இந்தப் பிரிவில் இந்தியாவுக்காக பார்பரா வெப்ஸ்டர் (1951), எலிஸபெத் டேவன்போர்ட் (1962), குர்மீத் கெளர் (1998) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.


கேனோ: அர்ஜுன், சுனில் இணைக்கு வெண்கலம் 

ஆடவர் இரட்டையர் 1000 மீட்டர் இறுதிச்சுற்றில் அர்ஜுன் சிங், சுனில் சிங் கூட்டணி 3.53 நிமிஷங்களில் 3ஆவதாக இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றது. உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் போட்டியாளர்கள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனர். இது, 1994க்குப் பிறகு ஆசிய போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கமாகும். அந்த ஆண்டிலும் இதே பிரிவில் சிஜி சதானந்தன், ஜானி ரோமெல் கூட்டணிக்கு வெண்கலம் கிடைத்தது. 

மகளிர் ஒற்றையர் கயாக் 500 மீட்டரில் சோனியா தேவி 8ஆம் இடம் பிடித்தார். அதிலேயே மகளிர் 4 பேர் பிரிவு இறுதிச்சுற்றில் சோனியா தேவி, பார்வதி கீதா, வினிதா சானு, திமிதா தேவி ஆகியோர் கூட்டணி 8ஆம் இடம் பிடித்தது. கேனோ மகளிர் இரட்டையர் 200 மீட்டர் இறுதிச்சுற்றில் காவேரி, நேஹா தேவி இணை 8ஆவதாக வந்தது. 

 

ஸ்குவாஷ்: 3 பதக்கங்கள் உறுதி


கலப்பு இரட்டையர் காலிறுதியில் தீபிகா பலிக்கல்/ஹரிந்தர்பால் சிங் சந்து கூட்டணி 21 என பிலிப்பின்ஸ் இணையை சாய்த்தது. அதிலேயே மற்றொரு இந்திய ஜோடியான அனாஹத் சிங்/அபய் சிங்கும் 21 என்ற கணக்கில் தென் கொரிய இணையை வீழ்த்தியது. ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் செளரவ் கோஷல் 30 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார். எனினும், மகளிர் ஒற்றையர் காலிறுதியில் தன்வி கன்னா 03 என ஜப்பான் வீராங்கனையிடம் தோற்றார். 

 

ஹாக்கி: அரையிறுதியில் மகளிர்


மகளிர் ஹாக்கியில் இந்தியா தனது குரூப் சுற்றில் 130 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக வந்தனா கட்டாரியா (2', 16', 48'), தீப் கிரேஸ் எகா (11', 34', 42'), தீபிகா (4', 54', 58'), சங்கீதா குமாரி (27', 55'), மோனிகா (7'), நவ்னீத் கெளர் (58') ஆகியோர் கோலடித்தனர். இந்தியா தனது அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.

 

கிளைம்பிங்: இந்தியர்கள் ஏமாற்றம்


ஸ்பீடு கிளைம்பிங் காலிறுதியில், ஆடவர் பிரிவில் அமன் வர்மா தோல்வியைத் தழுவ, மகளிர் பிரிவில் அனிஷா வர்மா, சிவ்பிரீத் பன்னு ஆகியோர் வெற்றியை இழந்தனர்.


800 மீ. ஓட்டம் 

ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அஃப்சல் 1.48 நிமிஷங்களில் 2ஆவது வீரராக இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். சவூதி அரேபியா, ஓமன் போட்டியாளர்கள் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் பெற்றனர். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான கிருஷன் குமார் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 


டெக்கத்லான்

ஆடவர் டெக்கத்லானில் தேஜஸ்வின் சங்கர் மொத்தமாக 7,666 புள்ளிகள் பெற்று தேசிய சாதனையுடன் 2ஆம் இடம் பிடித்தார். சீனா, ஜப்பான் போட்டியாளர்கள் முறையே தங்கம், வெண்கலம் பெற்றனர். 1974க்குப் பிறகு போட்டி வரலாற்றில் இந்த விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.


மும்முறை தாண்டுதல்

ஆடவர் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல் 16.68 மீட்டருடன் 3ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றார். சீன போட்டியாளர்கள் இருவர் முதலிரு இடங்களைப் பிடித்தனர். மற்றொரு இந்தியரான அபுபக்கர் அப்துல்லா 4ஆம் இடம் (16.62) பிடித்தார். 


400 மீ. ஹர்டுல்ஸ் 

மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் 3ஆவது வீராங்கனையாக வந்து வெண்கலம் பெற்றார். பஹ்ரைன், சீனா வீராங்கனைகளுக்கு முறையே தங்கம், வெள்ளி கிடைத்தது. ஏற்கெனவே வித்யா 4*400 மீட்டர் கலப்பு ரிலேவில் வெள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உயரம் தாண்டுதல்


மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா (1.80 மீ), ரூபினா யாதவ் (1.75 மீ) ஆகியோர் முறையே 6 மற்றும் 9ஆம் இடங்களைப் பிடித்தனர். ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் யஷஸ் பாலக்ஷா (49.39 வி), சந்தோஷ்குமார் (49.41 வி) முறையே 5 மற்றும் 6ஆம் இடங்களைப் பிடித்தனர். 


பாட்மின்டன்: சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த் முன்னேற்றம்


ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஹெச்.எஸ். பிரணாய் 20 என்ற கேம்களில் மங்கோலிய வீரரை வீழ்த்தினார். அதேபோல் கே.ஸ்ரீகாந்த்தும் 20 என தென் கொரிய வீரரை சாய்த்தார். மகளிர் ஒற்றையரில் சிந்து 20 என சீன தைபேவின் சு வென் சியை வென்றார். அஸ்மிதா சாலிஹா 02 என்ற கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையிடம் தோற்றார். மகளிர் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 20 என்ற கணக்கில் மாலத்தீவுகள் இணையை வீழ்த்தியது. மற்றொரு ஜோடியான தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பாவை எதிர்கொண்ட மாலத்தீவுகள் ஜோடி காயம் காரணமாக பாதியிலேயே விலகியதால், இந்திய இனை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் அனைவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். 

 

கபடி: ஆடவர், மகளிர் வெற்றி

குரூப் சுற்றில் இந்திய ஆடவர் அணி முதல் ஆட்டத்தில் 5518 என வங்கதேச அணியை வீழ்த்தியது. அதேபோல் மகளிர் அணி 2ஆவது ஆட்டத்தில் 5623 என தென் கொரிய அணியை தோற்கடித்தது. 
இந்திய ஆடவர் கபடி அணி இப்போட்டியில் 7 முறை சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


செஸ்: மகளிருக்கு வெற்றி


ஆடவர் அணி 22 என ஈரானுடன் டிரா செய்த டையில், பிரக்ஞானந்தா வெற்றி பெற, ஹரி கிருஷ்ணா, விதித் குஜராத்தி ஆகியோர் டிரா செய்தனர். குகேஷ் தோல்வி கண்டார். மகளிர் அணி 40 என மங்கோலியாவை வீழ்த்திய டையில் கோனெரு ஹம்பி, வைஷாலி, வந்திகா, சவிதா ஸ்ரீ ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்தனர். 


கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா


ஆடவர் கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க, அடுத்து நேபாளம் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களே சேர்த்தது. 
இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் விளாசினார். இதன் மூலம், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக சதமடித்த முதல் வீரர், டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இளம் இந்தியர் (19) என்ற சாதனைகள் படைத்தார். நேபாள பெளலிங்கில் தீபேந்திர சிங் அய்ரீ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் நேபாள இன்னிங்ஸில் அவரே 4 சிக்ஸர்கள் உள்பட 32 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருக்க, இந்திய தரப்பில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

 

செபாக் தக்ரா: ஆடவர் தோல்வி


குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 12 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி கண்டு, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 
போட்டி வரலாற்றில் இந்த விளையாட்டில் இந்தியா ஒருமுறை வெண்கலம் (2018) மட்டும் வென்றுள்ளது. 

 

பிரிட்ஜ் இந்தியா முன்னிலை


ஆடவர் அணிகள் அரையிறுதியில் இந்தியா, சீனாவுடனான மோதலில் செவ்வாய்க்கிழமை முடிவில் 102.6  75 என முன்னிலையில் இருந்தது. 
இந்த மோதல் மீண்டும் புதன்கிழமை தொடர்கிறது. மகளிர் அணி, கலப்பு அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.


குத்துச்சண்டை: பிரீத்தி, நரேந்தருக்கு வெண்கலம்

மகளிர் 54 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 05 என்ற கணக்கில் சீன வீராங்கனையிடம் வெற்றியை இழந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆடவர் +92 கிலோ பிரிவிலும் நரேந்தர் 05 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் வீரரிடம் தோல்வி கண்டு வெண்கலத்தை தனதாக்கினார். இதனிடையே, மகளிர் 75 கிலோ பிரிவு அரையிறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன் 50 என தாய்லாந்து போட்டியாளரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் அவர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார். எனினும் ஆடவர் 57 கிலோ பிரிவு காலிறுதியில் சச்சின் சிவச் 14 என சீன வீரரிடம் வெற்றியை இழந்து வெளியேறினார். 

டைவிங்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்


ஆடவர் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு பிரிவில் இந்தியாவின் சித்தார்த் பஜ்ரங் பர்தேசி, லண்டன் சிங் ஹெமாம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினர். தகுதிச்சுற்றில் சித்தார்த் 236 புள்ளிகளுடன் 16ஆவது இடமும், லண்டன் சிங் 207 புள்ளிகளுடன் 17ஆவது இடமும் பிடித்தனர். 

 

சாஃப்ட் டென்னிஸ்: இந்தியா வெளியேறியது 


ஆடவர், மகளிர் என இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. ஆடவர் பிரிவில் ஆதித்யா துபே, ஜெய் மீனா, அங்கித் படேல், ரோஹித் திமன், ராஜ்வீர் அமலியார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கம்போடியாவை வீழ்த்தி (30), தாய்லாந்து (12), தென் கொரியா (12), சீன தைபேவிடம் (12) தோல்வி கண்டது. அனுஷா, துஷிதா, நிகிதா, ராகஸ்ரீ ஆகியோர் அடங்கிய மகளிர் அணி ஜப்பான் (03), சீனாவிடம் (12) தோற்றாலும், மங்கோலியா (30), வியத்நாமை (30) வீழ்த்தியது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT