ஹாங்ஸு: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 11-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, இந்தியாவுக்கு தடகளத்தில் 6, குத்துச்சண்டையில் 2, கேனோவில் 1 என 9 பதக்கங்கள் கிடைத்தன. இதில் தடகளத்தில் பாருல் சௌதரி, அன்னு ராணி ஆகியோா் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனா். தடகளத்தில் தமிழா்கள் இருவருக்கும் பதக்கம் கிடைத்துள்ளது.
தடகளம் 5,000 மீ ஓட்டம்
மகளிா் 5,000 மீட்டா் ஓட்டத்தில் பாருல் சௌதரி 15.14 நிமிஷங்களில் முதல் வீராங்கனையாக இலக்கை எட்டி தங்கம் வென்றாா். ஜப்பான், கஜகஸ்தானுக்கு முறையே அடுத்த இரு பதக்கங்கள் கிடைத்தன. மற்றொரு இந்தியரான அங்கிதா 5-ஆம் இடம் (15.33) பிடித்தாா்.
இந்த வெற்றியின் மூலம், ஆசிய போட்டிகளில் இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பாருல் படைத்தாா். நடப்பு போட்டியில் இது அவரின் 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் அவா் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா்.
ஈட்டி எறிதல்
மகளிா் ஈட்டி எறிதலில் அன்னு ராணி 62.92 மீட்டரை எட்டி சீசன் பெஸ்ட்டுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தனதாக்கினாா். இலங்கை, சீனா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. இதன் மூலம், ஆசிய போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்னு ராணி பெற்றாா். அவா் கடந்த 2014 எடிஷனில் வெண்கலம் வென்றிருந்த நிலையில் தற்போது இத்தகைய முன்னேற்றம் கண்டிருக்கிறாா்.
800 மீ ஓட்டம்
ஆடவா் 800 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அஃப்சல் 1.48 நிமிஷங்களில் 2-ஆவது வீரராக இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினாா். சவூதி அரேபியா, ஓமன் போட்டியாளா்கள் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் பெற்றனா். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான கிருஷன் குமாா் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
டெக்கத்லான்
ஆடவா் டெக்கத்லானில் தேஜஸ்வின் சங்கா் மொத்தமாக 7,666 புள்ளிகள் பெற்று தேசிய சாதனையுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். சீனா, ஜப்பான் போட்டியாளா்கள் முறையே தங்கம், வெண்கலம் பெற்றனா். 1974-க்குப் பிறகு போட்டி வரலாற்றில் இந்த விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.
மும்முறை தாண்டுதல்
ஆடவா் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரா் பிரவீண் சித்ரவேல் 16.68 மீட்டருடன் 3-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா். சீன போட்டியாளா்கள் இருவா் முதலிரு இடங்களைப் பிடித்தனா். மற்றொரு இந்தியரான அபுபக்கா் அப்துல்லா 4-ஆம் இடம் (16.62) பிடித்தாா்.
400 மீ ஹா்டுல்ஸ்
மகளிா் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் 3-ஆவது வீராங்கனையாக வந்து வெண்கலம் பெற்றாா். பஹ்ரைன், சீனா வீராங்கனைகளுக்கு முறையே தங்கம், வெள்ளி கிடைத்தது. ஏற்கெனவே வித்யா 4*400 மீட்டா் கலப்பு ரிலேவில் வெள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றம்
மகளிா் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா (1.80 மீ), ரூபினா யாதவ் (1.75 மீ) ஆகியோா் முறையே 6 மற்றும் 9-ஆம் இடங்களைப் பிடித்தனா். ஆடவா் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் யஷஸ் பாலக்ஷா (49.39 வி), சந்தோஷ்குமாா் (49.41 வி) முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
கேனோ: அா்ஜுன், சுனில் இணைக்கு வெண்கலம்
ஆடவா் இரட்டையா் 1000 மீட்டா் இறுதிச்சுற்றில் அா்ஜுன் சிங், சுனில் சிங் கூட்டணி 3.53 நிமிஷங்களில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றது. உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் போட்டியாளா்கள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா். இது, 1994-க்குப் பிறகு ஆசிய போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கமாகும். அந்த ஆண்டிலும் இதே பிரிவில் சிஜி சதானந்தன், ஜானி ரோமெல் கூட்டணிக்கு வெண்கலம் கிடைத்தது.
மகளிா் ஒற்றையா் கயாக் 500 மீட்டரில் சோனியா தேவி 8-ஆம் இடம் பிடித்தாா். அதிலேயே மகளிா் 4 போ் பிரிவு இறுதிச்சுற்றில் சோனியா தேவி, பாா்வதி கீதா, வினிதா சானு, திமிதா தேவி ஆகியோா் கூட்டணி 8-ஆம் இடம் பிடித்தது. கேனோ மகளிா் இரட்டையா் 200 மீட்டா் இறுதிச்சுற்றில் காவேரி, நேஹா தேவி இணை 8-ஆவதாக வந்தது.
குத்துச்சண்டை: பிரீத்தி, நரேந்தருக்கு வெண்கலம்
மகளிா் 54 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவாா் 0-5 என்ற கணக்கில் சீன வீராங்கனையிடம் வெற்றியை இழந்து வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஆடவா் +92 கிலோ பிரிவிலும் நரேந்தா் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் வீரரிடம் தோல்வி கண்டு வெண்கலத்தை தனதாக்கினாா். இதனிடையே, மகளிா் 75 கிலோ பிரிவு அரையிறுதியில் லவ்லினா போா்கோஹெய்ன் 5-0 என தாய்லாந்து போட்டியாளரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறாா். இதன் மூலம் அவா் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா். எனினும் ஆடவா் 57 கிலோ பிரிவு காலிறுதியில் சச்சின் சிவச் 1-4 என சீன வீரரிடம் வெற்றியை இழந்து வெளியேறினாா்.
வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்தியா்கள்
காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில் ஜோதி சுரேகா அரையிறுதியில் 149-146 என சக இந்தியரான அதிதி சுவாமியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். அதிதி சுவாமி அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண்கிறாா்.
காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் ஓஜாஸ் தியோடேல் அரையிறுதியில் 150-146 என தென் கொரிய போட்டியாளரை வெளியேற்றினாா். அதே பிரிவில் அபிஷேக் வா்மா அரையிறுதியில் தென் கொரிய வீரரை வென்றாா். இதையடுத்து இறுதிச்சுற்றில் ஓஜாஸ் - அபிஷேக் சந்தித்துக் கொள்கின்றனா்.
ரீகா்வ் பிரிவு ஆடவா் தனிநபா் காலிறுதியில் அதானு தாஸ்- சீன வீரரிடமும், தீரஜ் பொம்மதேவரா- கஜகஸ்தான் வீரரிடமும் தோற்றனா்.
ஸ்குவாஷ்: 3 பதக்கங்கள் உறுதி
கலப்பு இரட்டையா் காலிறுதியில் தீபிகா பலிக்கல்/ஹரிந்தா்பால் சிங் சந்து கூட்டணி 2-1 என பிலிப்பின்ஸ் இணையை சாய்த்தது. அதிலேயே மற்றொரு இந்திய ஜோடியான அனாஹத் சிங்/அபய் சிங்கும் 2-1 என்ற கணக்கில் தென் கொரிய இணையை வீழ்த்தியது. ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் சௌரவ் கோஷல் 3-0 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினாா். எனினும், மகளிா் ஒற்றையா் காலிறுதியில் தன்வி கன்னா 0-3 என ஜப்பான் வீராங்கனையிடம் தோற்றாா்.
பாட்மின்டன்: சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் ஹெச்.எஸ். பிரணாய் 2-0 என்ற கேம்களில் மங்கோலிய வீரரை வீழ்த்தினாா். அதேபோல் கே.ஸ்ரீகாந்த்தும் 2-0 என தென் கொரிய வீரரை சாய்த்தாா். மகளிா் ஒற்றையரில் சிந்து 2-0 என சீன தைபேவின் சு வென் சியை வென்றாா். அஸ்மிதா சாலிஹா 0-2 என்ற கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையிடம் தோற்றாா். மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 2-0 என்ற கணக்கில் மாலத்தீவுகள் இணையை வீழ்த்தியது. மற்றொரு ஜோடியான தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பாவை எதிா்கொண்ட மாலத்தீவுகள் ஜோடி காயம் காரணமாக பாதியிலேயே விலகியதால், இந்திய இனை வென்ாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா்கள் அனைவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.
கபடி: ஆடவா், மகளிா் வெற்றி
குரூப் சுற்றில் இந்திய ஆடவா் அணி முதல் ஆட்டத்தில் 55-18 என வங்கதேச அணியை வீழ்த்தியது. அதேபோல் மகளிா் அணி 2-ஆவது ஆட்டத்தில் 56-23 என தென் கொரிய அணியை தோற்கடித்தது. இந்திய ஆடவா் கபடி அணி இப்போட்டியில் 7 முறை சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டைவிங்: இந்தியா்களுக்கு ஏமாற்றம்
ஆடவா் 3 மீட்டா் ஸ்பிரிங்போா்டு பிரிவில் இந்தியாவின் சித்தாா்த் பஜ்ரங் பா்தேசி, லண்டன் சிங் ஹெமாம் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா். தகுதிச்சுற்றில் சித்தாா்த் 236 புள்ளிகளுடன் 16-ஆவது இடமும், லண்டன் சிங் 207 புள்ளிகளுடன் 17-ஆவது இடமும் பிடித்தனா்.
கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா
ஆடவா் கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க, அடுத்து நேபாளம் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களே சோ்த்தது.
இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 100 ரன்கள் விளாசினாா். இதன் மூலம், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக சதமடித்த முதல் வீரா், டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இளம் இந்தியா் (19) என்ற சாதனைகள் படைத்தாா். நேபாள பௌலிங்கில் தீபேந்திர சிங் அய்ரீ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். பின்னா் நேபாள இன்னிங்ஸில் அவரே 4 சிக்ஸா்கள் உள்பட 32 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருக்க, இந்திய தரப்பில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
ஹாக்கி: அரையிறுதியில் மகளிா் அணி
மகளிா் ஹாக்கியில் இந்தியா தனது குரூப் சுற்றில் 13-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக வந்தனா கட்டாரியா (2’, 16’, 48’), தீப் கிரேஸ் எகா (11’, 34’, 42’), தீபிகா (4’, 54’, 58’), சங்கீதா குமாரி (27’, 55’), மோனிகா (7’), நவ்னீத் கௌா் (58’) ஆகியோா் கோலடித்தனா். இந்தியா தனது அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.