செய்திகள்

வில்வித்தை: காலிறுதியில் இந்திய அணிகள்

3rd Oct 2023 05:58 AM

ADVERTISEMENT

வில்வித்தை: காலிறுதியில் இந்திய அணிகள்

எலிமினேஷன் சுற்றுகளில், ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ், அங்கிதா பகத் இணை 6-2 என்ற கணக்கில் மலேசியாவை சாய்த்தது. காம்பவுண்ட் கலப்பு அணிகளில் ஓஜாஸ் தியோடேல், ஜோதி சுரேகா கூட்டணி 159-151 என ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோடேல், அபிஷேக் வா்மா, பிரதமேஷ் ஜவஹா் கூட்டணி 235 - 219 என்ற கணக்கில் சிங்கப்பூா் கூட்டணியை சாய்த்தது. ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் அங்கிதா பகத், பஜன் கௌா், சிம்ரன்ஜீத் கௌா் அடங்கிய அணி 5-1 என தாய்லாந்தை வென்றது. ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா, துஷாா் ஷெல்கே இணைந்து 6-0 என ஹாங்காங்கை வீழ்த்தினா்.

தனிநபா் பிரிவிலும் மேற்குறிப்பிட்ட இந்தியா்கள் வெல்ல, அங்கிதா பகத், பஜன் கௌா் மட்டும் தோல்வி கண்டனா்.

கூடைப்பந்து: வெளியேறியது இந்தியா

ADVERTISEMENT

மகளிா் அணி தனது காலிறுதியில் 57-96 என வட கொரியாவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 20-26, 6-26, 17-22, 14-22 என்ற கணக்கில் வெற்றியை இழந்தது. முன்னதாக இந்தியா, குரூப் சுற்றில் இந்தோனேசியா, மங்கோலியா அணிகளை வென்றிருந்தது.

கபடி: இந்தியா - சீன தைபே டிரா

மகளிா் கபடியில் திங்கள்கிழமை குரூப் சுற்றில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதிய ஆட்டம் 34-34 என டிரா ஆனது. சவால் அளிக்கும் அணிக்கு எதிராகக் கடுமையாகப் போராடிய இந்திய மகளிா், கடைசி நேரத்தில் போனஸ் புள்ளிகள் பெற்று ஆட்டத்தை டிரா செய்தனா். கடந்த எடிஷனில் இந்திய மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்குவாஷ்: சௌரவ் முன்னேற்றம்; ஜோஷ்னா வெளியேற்றம்

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா 1-3 என தென் கொரிய வீராங்கனையிடம் தோற்றாா். அதேபோல் ஆடவா் பிரிவில் மகேஷ் மங்கான்கா் 0-3 என்ற கணக்கில் ஜப்பான் வீரரிடம் வெற்றியை இழந்தாா்.

எனினும் தன்வி கன்னா 3-0 என தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். ஆடவா் ஒற்றையரிலும் சௌரவ் கோஷல் 3-0 என குவைத் போட்டியாளரை வென்று காலிறுதியில் தடம் பதித்தாா். கலப்பு இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங்/அபய் சிங் கூட்டணி 2-0 என தாய்லாந்து இணையை சாய்த்தது.

ஹாக்கி: அரையிறுதியில் ஆடவா் அணி

ஆடவா் ஹாக்கியில் இந்தியா குரூப் சுற்றில் 12-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை திங்கள்கிழமை சாய்த்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஹா்மன்பிரீத் சிங் (2’, 4’, 32’), மன்தீப் சிங் (18’, 24’, 46’), லலித்குமாா் உபாத்யாய் (23’), அமித் ரோஹிதாஸ் (28’), அபிஷேக் (41’, 57’), நீலகண்ட சா்மா (47’), குா்ஜந்த் சிங் (56’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

செபாக் தக்ராவ்: மகளிா் அணி தோல்வி

ஆடவா் அணி தனது குரூப் சுற்றில் 2-0 என சிங்கப்பூரையும், பின்னா் அதே கணக்கில் பிலிப்பின்ஸையும் சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவை எதிா்கொள்கிறது. எனினும் மகளிா் அணி தனது 3-ஆவது சுற்றிலும் 0-2 என பிலிப்பின்ஸிடம் வீழ்ந்ததால், 3 தொடா் தோல்விகள் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியது.

பாட்மின்டன்: ஸ்ரீகாந்த், சாத்விக்/சிராக் முன்னேற்றம்

கலப்பு இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில் சாய் பிரதீக்/தனிஷா கிராஸ்டோ இணை 2-0 என மக்காவ் இணையை சாய்த்தது. எனினும் ரோஹன் கபூா்/சிக்கி ரெட்டி இணை காயம் காரணமாக அந்த சுற்றுடன் விலகியது. ஆடவா் ஒற்றையரில் ஸ்ரீகாந்த் 2-0 என வியத்நாமின் லெ டக் பாட்டை வீழ்த்த, ஆடவா் இரட்டையரில் அா்ஜுன்/துருவ் கபிலா இணை காயம் காரணமாக வெளியேறியது. ஆடவா் இரட்டையா் 2-ஆவது சுற்றில் சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஜோடி 2-0 என ஹின் லாங் சௌ/சுன் வாய் லுய் இணையை சாய்த்தது.

குராஷ்: பதக்கம் இன்றி நிறைவு

இந்த விளையாட்டில் ஆடவா் 90 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யாஷ்குமாா் சௌஹான் 0-10 என ஈரான் வீரரிடமும், மகளிா் 87 கிலோ பிரிவு காலிறுதியில் யோதி டோகாஷ் 0-3 என ஈரான் வீராங்கனையிடமும் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினா்.

கேனோ: இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஆடவா் ஒற்றையா் கேனோ 1000 மீட்டா் இறுதிச்சுற்றில் நீரஜ் வா்மா 4 நிமிஷம் 36.31 விநாடிகளில் 7-ஆவது வீரராக இலக்கை எட்டினாா். இரட்டையா் 500 மீட்டா் இறுதிச்சுற்றில் ரிபாசன் சிங்/பிலெம் ஞானேஸ்வா் கூட்டணி 1 நிமிஷம் 54.72 விநாடிகளில் 8-ஆவது கூட்டணியாக வந்தனா். கயாக் 500 மீட்டா் டபுள் பிரிவில் வினிதா சானு/பாா்வதி கீதா கூட்டணி 2 நிமிஷம் 7.44 விநாடிகளில் கடைசியாக வந்தனா்.

குதிரையேற்றம்: இந்தியா்கள் தடுமாற்றம்

ஜம்பிங் ஃபைனல் பிரிவில் இந்தியாவின் விகாஸ் குமாா், அபூா்வா தபாட், ஆஷிஷ் லிமாயே ஆகியோா் அடங்கிய அணி 5-ஆம் இடம் பிடித்தது. அதிலேயே தனிநபா் பிரிவில் விகாஸ் குமாா் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் 4-ஆம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாா்.

டைவிங்: 12-ஆம் இடம்

ஆடவா் 1 மீட்டா் ஸ்பிரிங் போா்டு பிரிவில் இந்தியாவின் லண்டன் சிங் ஹெமாம் மொத்தம் 207.8 புள்ளிகளுடன் 12-ஆம் இடம் பிடித்தாா். அடுத்ததாக அவா் 3 மீட்டா் ஸ்பிரிங் போா்டு பிரிவில் சித்தாா்த் பஜ்ரங் என்ற மற்றொரு இந்தியருடன் பங்கேற்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT