செய்திகள்

அரிமாவுக்கு ஐந்தாம் முறையாக அரியனை

31st May 2023 02:00 AM

ADVERTISEMENT

ஐபிஎல் அரியனைக் கட்டிலில் 5-ஆம் முறையாக அமா்ந்திருக்கிறது அரிமாவை அடையாளமாகக் கொண்ட சென்னை சூப்பா் கிங்ஸ் அணி.

வானிலையால் ஏற்பட்ட தடுமாற்றத்திலிருந்து தப்பித்துக் கொண்டு வாகை சூடியிருக்கிறது. ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் இதற்கு முன் எந்தவொரு இறுதி ஆட்டமும் இப்படி நீடித்ததில்லை.

இறுதி ஆட்டத்தின் நாளில் மழை பெய்ய, ரிசா்வ் நாளுக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு, அந்த நாளின் ஆட்டமும் மழை பாதிப்புக்கு உள்ளானது.

எப்போதுமே ஒரு அணி இலக்கை நிா்ணயிக்க, அடுத்த அணி சேஸிங்கை உடனே தொடங்கினால் தான் உத்வேகம் இருக்கும். ஆனால் சென்னைக்கு சற்றே சவால் அளித்தது வானிலை.

ADVERTISEMENT

வழக்கமாக இன்னிங்ஸை தொடங்க வேண்டிய நேரத்திலிருந்து 3 மணி நேரம் தாமதமாக இன்னிங்ஸை தொடங்கியது சென்னை. உளவியல் ரீதியாக நிச்சயம் இது வீரா்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அதை தகுந்த முறையில் கையாண்டு கோப்பையை கைப்பற்றியிருக்கிறது சென்னை அணி.

முதல் ஓவரில் இருந்தே தகுந்த ரன் ரேட்டை தக்கவைத்துக் கொண்டது, ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வேயின் நல்ல தொடக்கம், மிடில் ஆா்டரில் அஜிங்க்ய ரஹானே - அம்பட்டி ராயுடுவின் திடீா் அதிரடி, வழக்கமாக அதிரடி காட்டும் ஷிவம் துபே இம்முறை பாா்ட்னா்ஷிப்புக்காக பொறுமையாக ஆடியது, முடிவில் ஜடேஜா கடைசி இரு பந்துகளில் காட்டிய ஜாலம் என ஒரு அணியாக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது சென்னை.

மறுபுறம், குஜராத் பேட்டிங்கில் ஷுப்மன் கில் சோபிக்காமல் போக, திடீரென வெகுண்டு சததத்தை நெருங்கிய சாய் சுதா்சன், பௌலிங்கில் 3 விக்கெட்டுகள் சாய்த்ததுடன், கடைசி டெத் ஓவா்களில் சிறப்பாக பந்துவீசிய மோஹித் சா்மாவையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அத்தகைய இறுதி ஆட்டத்தின் முக்கியமான சில தருணங்கள் மற்றும் இந்த எடிஷன் புள்ளி விவரங்கள், இதோ...

உணர்ச்சிகள் பொங்கிய தோனி...
 கடைசி பந்தில் வெற்றிக்கான பவுண்டரியை விளாசிய பிறகு மகிழ்ச்சிப் பெருக்கில் ஓடி வந்த ஜடேஜாவை டகெளட் அருகே தோனி கட்டிப் பிடித்து தூக்கினார். அந்த அணைப்பின்போது தோனி சற்றே உணர்ச்சிபூர்வமாக அழுதது தெரிந்தது. அதேபோல், முக்கியமான நேரத்தில் பேட் செய்ய வந்து முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததை தோனியே நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்தது தெரிந்தது. களத்திலேயே அதை சற்று வெளிக்காட்டிய அவர், பின்னர் டகெளட்டில் அமர்ந்திருந்தபோதும் தலையை இருபுறமும் அசைத்தவாறு அந்தத் தருணத்தை நம்ப முடியாதவராக காணப்பட்டார். கடைசிப் பந்தில் பவுண்டரி தேவைப்பட்டபோது டகெளட்டில் அமர்ந்திருந்த தோனி, ஆட்டத்தை பார்க்காமல் கண்கள் மூடி அமர்ந்திருந்தார். பொதுவாக கோபம், மகிழ்ச்சி என எந்தவொரு உணர்வையுமே வெளிக்காட்டாமல் சமநிலையுடன் காணப்படும் தோனி, இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டது ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வட்டாரத்திலும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. ஜடேஜாவை கட்டியணைத்து தூக்கியதில் இருந்தே இந்த சீசன் சாம்பியன் பட்டமானது தோனிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததென தெளிவாகத் தெரிந்தது.
 1,47,000 மரக் கன்றுகள்
 பசுமையை அதிகரிக்கும் முயற்சியாக இந்த சீசன் பிளே-ஆப் ஆட்டங்களில் வீசப்படும் ஒவ்வொரு "டாட்' பந்துகளுக்கும் தலா 500 மரக் கன்றுகள் நட்டு வைக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. "குவாலிஃபயர்-1' முதல் இறுதி ஆட்டம் வரை பிளே-ஆஃப் சுற்றில் மொத்தம் 290 டாட் பந்துகள் வீசப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 1,47,000 மரக் கன்றுகளை நாடு முழுவதுமாக டாடா குழுமத்துடன் இணைந்து பிசிசிஐ நட்டு வைக்கவுள்ளது. பிளே-ஆஃப் சுற்றில் டாட் பந்துகளை அதிகம் வீசியது மும்பையின் ஆகாஷ் மத்வல், குஜராத்தின் முகமது ஷமி மற்றும் ரஷீத் கான், சென்னையின் மதீஷா பதிரானா ஆகியோராவர்.
 சாதித்த "சர்' ஜடேஜா...
 இறுதி ஆட்டத்தின் பரபரப்பு எப்படி இருக்கும், அதில் கடைசி ஓவரின் விறுவிறுப்பு எவ்வாறு இருக்கும் என்று தெரிந்திருப்போம். அதிலும் 10 ரன்கள் தேவையிருக்க, கடைசி இரு பந்துகளை எதிர்கொள்வது... நினைத்தாலே நெருக்கடி தோன்றும் அந்த தருணத்தை எதிர்கொண்டார் ஜடேஜா. மைதானமே அவரை மையப் புள்ளியாகக் கொண்டிருக்க, முதலில் ஒரு சிக்ஸர்... அடுத்து ஒரு பவுண்டரி... நம்பமுடியாத ஒன்றை நிகழ்த்திக் காட்டினார் அவர்.
 உண்மையைச் சொல்வதென்றால் சென்னை ரசிகர்களுக்கு அன்பான ஒரு பதிலடியை ஜடேஜா கொடுத்தார். எங்குமில்லாத வகையில், விருப்பமான அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஜடேஜா களத்தில் இருக்கும்போது அவர் ஆட்டமிழக்க வேண்டும் ரசிகர்கள் நினைப்பது தான். காரணம் அவர் மீது வெறுப்பு அல்ல. அவரை விட தோனி மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பு. ஜடேஜாவுக்கு அடுத்து தோனி பேட்டிங் செய்ய வருவார் என்பதால், ஜடேஜா விரைந்து ஆட்டமிழக்க வேண்டும் என்று ரசிகர்கள் மைதானத்தில் (அன்பு?) கூச்சலிடுவதை நாம் கேட்டிருக்கலாம்.
 இந்த நிகழ்வை குறிப்பிட்டு சென்னை ரசிகர் சுட்டுரையில் ஜடேஜாவுக்கு ஆதரவாக பதிவிட, அதை "லைக்' செய்து ஜடேஜாவும் தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியிருந்தார். ரசிகர்களால் அன்போடு "சர் ஜடேஜா' என்றழைக்கப்படும் அவர், இந்த சாம்பியன் கோப்பையை தோனிக்கு சமர்ப்பிப்பதாக கூறினார். தோனி தன்னை தூக்கிக் கொண்ட படத்தை, பின்னர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் முகப்புப் படமாக வைத்தார்.
 ரசிகர்கள் அன்புக்கு எனது பரிசு
 எனது ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே சரியான தருணம். ஆனால், ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அன்பு அதைச் செய்யவிடாமல் கட்டிப்போடுகிறது. ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது எளிது. ஆனால், அடுத்த 9 மாதங்கள் கடுமையாக உழைத்து இன்னும் ஒரு ஐபிஎல் விளையாடுவதென்பது உடல் ரீதியாக எனக்கு கடினமானது. இருந்தாலும் ரசிகர்களுக்கான எனது பரிசாக அதைச் செய்கிறேன்.
 சென்னை அணிக்காக முதல் ஆட்டத்தில் விளையாட களம் கண்ட தருணம் உணர்வுப்பூர்வமானது. எல்லோரும் என் பெயரை உச்சரிக்க, எனது கண்கள் கலங்கிவிட்டன. அதிலிருந்து மீள எனக்கு சிறிது நேரம் ஆனது. பிறகு, அதை நான் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னால் முடிந்ததை நான் செய்வதற்காக, நான் யாராக இருக்கிறேனோ அதற்காக ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள்.
 எம்.எஸ். தோனி
 கோப்பையில் என்ன?
 சாம்பியன் கோப்பையில், இதுவரை சாம்பியன் ஆன அணிகளின் பெயர்களோடு "யத்ர ப்ரதிபா அவசரா ப்ராப்னோதி' என்ற சமஸ்கிருத வார்த்தைகள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். "திறமைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடம்' என்பதே அதன் அர்த்தமாகும்.
 இறுதியில் முதல் தோல்வி...
 குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா, தான் விளையாடிய இறுதி ஆட்டத்தில் தோல்வி காண்பது இது முதல் முறையாகும். இதற்கு முன் 2015, 2017, 2019, 2020 ஆகிய எடிஷன்களில் அவர் இருந்த மும்பை அணி சாம்பியன் ஆகியிருந்தது. 2022-இல் அவர் தலைமையில் அறிமுகமான குஜராத் அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
 கோப்பையை பெற்ற ஜடேஜா, ராயுடு...
 சாம்பியன் கோப்பையை, வழக்கமாக வெற்றி பெற்ற அணியின் கேப்டன் சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து பெறும் நிலையில், இந்த முறை கோப்பை வெல்லக் காரணமாக இருந்த ஜடேஜா, இந்த எடிஷனுடன் ஓய்வு பெறும் அம்பட்டி ராயுடு ஆகியோரை மேடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே கோப்பையை பெற்றுக்கொள்ளச் செய்தார் தோனி.
 ஓய்வுபெற்றார்...
 இந்த ஆட்டத்துடன் சென்னை வீரர் அம்பட்டி ராயுடு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் 2010 முதல் மும்பை, சென்னை அணிகளில் விளையாடியிருக்கும் ராயுடு, மொத்தமாக 203 ஆட்டங்களில் 4,348 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 1 சதம், 22 அரைசதம் அடக்கம். அதிகபட்ச ஸ்கோர் 100. இறுதி ஆட்டத்தின் முடிவில் கண்ணீருடன் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார் அவர்.
 பரிசுத் தொகை
 "சாம்பியன்' சென்னைக்கு - ரூ.20 கோடி
 "ரன்னர்-அப்' குஜராத்துக்கு- ரூ.12.5 கோடி
 இந்த எடிஷனில்...
 சிக்ஸர்கள்
 1,124
 பவுண்டரிகள்
 2,174
 சதங்கள்
 12
 அரைசதங்கள்
 141
 தொகுப்பு: நாதன் நடராஜன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT