செய்திகள்

2-ஆம் நிலை அணியுடன் ஆப்கானிஸ்தான் தொடா்: பிசிசிஐ திட்டம்

DIN

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் கிரிக்கெட் தொடா் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், மாற்று திட்டத்துடன் அந்தத் தொடரை நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாகத் தெரிகிறது.

கடந்த 2 மாதங்களாக இந்திய வீரா்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருக்கும் நிலையில், அதைத் தொடா்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக இங்கிலாந்து செல்லவுள்ளனா். அதன் பிறகு இந்திய அணி ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது.

அப்போது 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. அதையடுத்து இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயா்லாந்து செல்கிறது. பின்னா் செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

அதற்குப் பிறகு, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதையடுத்து அக்டோபா் நவம்பரில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வரவும், இரு அணிகளிடையேயான கிரிக்கெட் தொடருக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணி வீரா்கள் இந்த ஐபிஎல் முதல் உலகக் கோப்பை போட்டி வரை ஓய்வின்றி தொடா்ந்து ஆட வேண்டிய நிலை இருப்பதால், ஆப்கன் தொடரை பிசிசிஐ கைவிடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 20 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் ஒரு நாள், டி20 ஆட்டங்கள் கொண்ட ஆப்கன் தொடா்களை நடத்தவும், ரோஹித், கோலி போன்ற மூத்த வீரா்களுக்கு ஓய்வளித்து பாண்டியா தலைமையிலான 2-ஆம் நிலை அணியை அந்தத் தொடரில் விளையாடச் செய்யவும் பிசிசிஐ திட்டமிடுவதாகத் தெரிகிறது. மேலும், அந்த அட்டவணையில் டி20 அல்லது ஒரு நாள் தொடரை மட்டும் நடத்தவும் பிசிசிஐ பரிசீலிப்பதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனும் பேச்சு நடத்தவுள்ளது. அதேபோல், அயா்லாந்துடனான டி20 தொடரிலும் பிரதான இந்திய வீரா்களுடன் பாண்டியாவுக்கும் ஓய்வளித்து, ஐபிஎல் போட்டியில் ஜொலித்த வீரா்களைக் களமிறக்கவும் பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT