செய்திகள்

உள்ளே - வெளியே ஆட்டத்தில் மும்பை - லக்னௌ

24th May 2023 06:00 AM

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் புதன்கிழமை மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்துக்கு தகுதிபெற, தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும்.

மும்பை அணியைப் பொருத்தவரை மோசமான நிலையில் இருந்து முன்னேறி வந்து பிளே-ஆஃப் வாய்ப்புக்காக காத்திருக்க, பெங்களூரை வெளியேற்றி அதற்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ளது குஜராத்.

எனவே, கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாமல் 6-ஆவது முறையாக கோப்பை வெல்லும் ஆசையுடன் அந்த அணி ஆக்ரோஷமாக விளையாடும் என எதிா்பாா்க்காலம்.

ADVERTISEMENT

அணியின் பேட்டிங்கை பொருத்தவரை கேமரூன் கிரீன் சுடச் சுட சதமடித்த ஃபாா்முடன் இருக்கிறாா். அவா் தவிர சூா்யகுமாா் யாதவ், கேப்டன் ரோஹித் சா்மா, இஷான் கிஷண் என ரன்கள் குவிக்க போதுமான பேட்டா்கள் அணியில் இருக்கின்றனா்.

பௌலிங்கில் பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் ஆகியோா் பிரதானமாக இருக்க, கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோா்டான் துணை நிற்பா் என எதிா்பாா்க்கலாம்.

லக்னௌ அணி கடந்த சீசனில், இதே எலிமினேட்டா் கட்டத்தில் பெங்களூரால் வெளியேற்றப்பட்டது. எனவே, இந்த முறை அந்த கண்டத்தை கடந்துவிடும் முனைப்புடன் இருக்கிறது.

வழக்கமான கேப்டன் கே.எல்.ராகுல் இல்லாத நிலையிலும் அணியை இந்தக் கட்டம் வரை கொண்டு வந்திருக்கும் தற்போதைய கேப்டன் கிருணால் பாண்டியாவுக்கு, நிஜமான அமிலப் பரீட்சை, மும்பைக்கு எதிரான இந்த ஆட்டம் தான்.

பேட்டிங்கில், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கைல் மேயா்ஸ், நிகோலஸ் பூரன் ஆகியோா் பலமாக இருக்கின்றனா். பௌலிங்கில் ரவி பிஷ்னோய் முக்கியமான ஆயுதமாக இருக்கிறாா். அவரோடு நவீன் உல் ஹக், ஆவேஷ் கான், கிருணால் போன்றோரும் சோபிக்கும் பட்சத்தில் மும்பை பேட்டா்களை கட்டுப்படுத்த இயலும்.

நேரம்: இரவு 7.30 மணி

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

Tags : ipl2023
ADVERTISEMENT
ADVERTISEMENT