செய்திகள்

10-வது முறையாக இறுதிப் போட்டியில் சிஎஸ்கே: குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

23rd May 2023 11:41 PM

ADVERTISEMENT

ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஐபில் தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று (மே 23) விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கான்வே 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் தரப்பில் முகமது ஷமி, மோஹித் சர்மா தலா 2 விக்கெடுகளைக் கைப்பற்றினர். தர்ஷன் நல்கண்டே, ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர். சஹா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் ஹார்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தாசுன் ஷானகா (17 ரன்கள்), டேவிட் மில்லர் (4 ரன்கள்), விஜய் சங்கர் (14 ரன்கள்) மற்றும் ராகுல் திவாட்டியா (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களுக்கு குஜராத் டைட்டன்ஸ் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹார், மதீஷா தீக்‌ஷனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT