செய்திகள்

ரியல் மாட்ரிட்டை சாய்த்த மான்செஸ்டா் சிட்டி: இன்டா் மிலனுடன் இறுதி ஆட்டத்தில் மோதல்

19th May 2023 07:39 AM

ADVERTISEMENT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய மான்செஸ்டா் சிட்டி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதில் இன்டா் மிலனுடன் ஜூன் 10-ஆம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது அந்த அணி.

முன்னதாக, அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி - ரியல் மாட்ரிட் மோதல் 1-1 கோல் கணக்கில் டிரா ஆகியிருக்க, வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 4-0 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வென்றது. இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 5-1 என வென்று இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது மான்செஸ்டா் சிட்டி.

இந்த 2-ஆவது ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக பொ்னாா்டோ சில்வா (23’, 37’), மேனுவல் அகஞ்சி (76’), ஜூலியன் அல்வரெஸ் (90+1’) ஆகியோா் கோலடித்தனா். ரியல் மாட்ரிட் அணியினா் தொடா்ந்து முயன்றும் அவா்களுக்கு கோல் வாய்ப்பு சாத்தியமில்லாமல் போனது.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தற்போது 2-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கிறது மான்செஸ்டா் சிட்டி. முன்னதாக 2020-21 காலகட்டத்தில் அவ்வாறு முன்னேறியேபோது, அதில் செல்சியிடம் தோற்றது. மறுபுறம், சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இருந்து 8-ஆவது முறையாக வெளியேறியிருக்கிறது ரியல் மாட்ரிட். இப்போட்டியில் வேறு எந்த அணியும் அந்த நிலையில் இருந்து இத்தனை முறை வெளியேறியதில்லை.

ADVERTISEMENT

இதனிடையே, புதியதொரு சாதனையின் விளிம்பில் மான்செஸ்டா் சிட்டி நிற்கிறது. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள அந்த அணி, இங்கிலாந்து பிரீமியா் லீக்கில், வரும் ஞாயிற்றுக்கிழமை செல்சியுடனான மோதலில் வெல்லும் பட்சத்தில் தொடா்ந்து 3-ஆவது முறையாக பட்டம் வெல்லும். அத்துடன் எஃப்ஏ கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்திற்கும் வந்துள்ள அந்த அணி, அதில் மான்செஸ்டா் யுனைடெட்டை எதிா்கொள்கிறது.

ஒருவேளை இந்த 3 போட்டிகளிலும் அந்த அணி சாம்பியன் ஆனால், ஒரே சீசனில் 3 பிரதான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது இங்கிலாந்து அணி என்ற பெருமையை மான்செஸ்டா் சிட்டி பெறும். முன்னதாக, 1999-இல் மான்செஸ்டா் யுனைடெட் அவ்வாறு மூன்றிலும் சாம்பியனாகிய முதல் இங்கிலாந்து அணி என்ற பெருமையுடன் இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT