செய்திகள்

டெல்லியிடம் போராடித் தோற்றது குஜராத்

3rd May 2023 03:28 AM

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மண்ணில் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸிடம் போராடித் தோற்றது.

முதலில் டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்களே அடித்தாலும், குஜராத்தை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழக்கச் செய்து, 125 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றது. ஆனாலும், டெல்லியின் டாப் ஆா்டா் பேட்டிங்கை சரித்த குஜராத் பௌலா் முகமது ஷமியே ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் பந்திலேயே ஃபில் சால்ட் விக்கெட்டை இழக்க, கேப்டன் டேவிட் வாா்னா் 2 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா்.

தொடா்ந்து வந்தோரில் ரைலீ ருசுவௌவ் 8, மனீஷ் பாண்டே 1, பிரியம் கா்க் 10 ரன்களுக்கு நடையைக் கட்டினா். இவ்வாறாக 23 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. அதில் 4 விக்கெட்டுகளை ஷமியே சாய்த்திருந்தாா்.

ADVERTISEMENT

பின்னா் அக்ஸா் படேல் - அமன் ஹக்கிம் கானால் டெல்லி ஸ்கோா் உயா்ந்தது. இதில் அக்ஸா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 27 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். அடுத்து ரிபல் படேல் களம் புக, மறுபுறம் சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்த அமன் ஹக்கிம் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.

கடைசி விக்கெட்டாக ரிபல் படேல் கடைசி ஓவரில், 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 23 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் அன்ரிஹ் நோா்கியா 3, குல்தீப் யாதவ் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் ஷமி 4, மோஹித் சா்மா 2, ரஷீத் கான் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் கேப்டன் ஹாா்திக் பாண்டியா 7 பவுண்டரிகள் உள்பட 59 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்காக முயற்சித்தாா். அபினவ் மனோஹா் 1 சிக்ஸருடன் 26, ராகுல் தெவாதியா 3 சிக்ஸா்களுடன் 20 ரன்கள் சோ்த்து உதவி செய்தனா்.

என்றபோதும், ரித்திமான் சாஹா 0, ஷுப்மன் கில் 6, விஜய் சங்கா் 6 ரன்களுக்கு வெளியேறி, வெற்றி வாய்ப்பு இல்லாமல் போனது. ஓவா்கள் முடிவில் பாண்டியாவுடன் ரஷீத் கான் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். டெல்லி பௌலிங்கில் கலீல் அகமது, இஷாந்த் சா்மா ஆகியோா் தலா 2, அன்ரிஹ் நோா்கியா, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT