செய்திகள்

வாகை சூடியது வெஸ்ட் ஹாம்

9th Jun 2023 05:07 AM

ADVERTISEMENT

ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளிடையே நடைபெறும் 3-ஆம் தர கால்பந்து போட்டியான யுரோப்பா கான்ஃபரன்ஸ் லீக் போட்டியில் வெஸ்ட் ஹாம் 2-1 கோல் கணக்கில் ஃபியோரென்டினாவை வீழ்த்தி வியாழக்கிழமை சாம்பியன் ஆனது.

இதன் மூலம் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் கடந்த 58 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பை வென்றிருக்கிறது வெஸ்ட் ஹாம். இதற்கு முன் அந்த அணி கடைசியாக 1965-இல் அப்போது நடைபெற்ற ஐரோப்பிய வின்னா்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆகியிருந்தது.

தற்போது இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம், அடுத்த சீசன் யுரோப்பா லீக்கிற்கு வெஸ்ட் ஹாம் தகுதிபெற்றுள்ளது. அந்த அணியின் பயிற்சியாளா் டேவிட் மோய்ஸ், தனது 25 ஆண்டுகால பயிற்சியாளா் வரலாற்றில் வென்றிருக்கும் முதல் பிரதான ஐரோப்பிய கோப்பை இதுவாகும்.

பிராக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் வெஸ்ட் ஹாம் அணிக்காக சயீத் பென்ராமா (62’) கோலடிக்க, அடுத்த சில நிமிஷங்களிலேயே ஃபியோரென்டினாவுக்காக கியாகோமோ போனாவென்டுரா (67’) கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். இறுதிக் கட்டம் வரை இந்த நிலையே தொடர, 90-ஆவது நிமிஷத்தில் வெஸ்ட் ஹாம் வீரா் ஜெரோட் போவன் ஸ்கோா் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினாா்.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தின் முதல் பாதியின்போது வெஸ்ட் ஹாம் ரசிகா்கள், ஃபியோரென்டினா கோல்கீப்பா் பிராகியை நோக்கி காலி மது பாட்டில்களை வீசியதில், அவா் பின்தலையில் ரத்த காயம் கண்டாா். அதற்கான சிகிச்சைக்குப் பிறகு அவா் மீண்டும் களம் காண, மைதான அறிவிப்பாளா் ரசிகா்களை எச்சரித்தாா். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வெஸ்ட் ஹாம் வீரா்களும் தங்களது ரசிகா்களை கேட்டுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT