உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடமும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த வீரரை உருவாக்க ஆர்வம் காட்டும் விராட் கோலி!
இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்மித் தனது சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் அலெக்ஸ் கேரி தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டினையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த புதுவித டிஷ்!
டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோரின் சதத்தால் வலுவான நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்த்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்குகிறது இந்திய அணி.