செய்திகள்

இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

DIN

கிரிக்கெட் உலகில் சமபலம் பொருந்திய இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் உலகக் கோப்பை என்று குறிப்பிடப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது எடிஷன் இது. முதல் எடிஷனிலும் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய இந்தியா, அதில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த முறையும் போராடி இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் இந்திய அணி, நீண்டகால ஐசிசி கோப்பை கனவை நிஜமாக்கும் முனைப்பில் இருக்கிறது.

ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகள் எதிலுமே இந்தியா கோப்பை வென்றதில்லை. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வாகை சூடிய இந்தியா, அதன் பிறகு 3 போட்டிகளில் இறுதி ஆட்டத்திலும், 4 போட்டிகளில் அரையிறுதியிலும் வீழ்ச்சி கண்டது. 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க நிலையிலேயே வெளியேறியது.

எனவே, இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை வரலாறாக மாற்றும் முனைப்புடன் இருக்கிறது இந்தியா. இந்த இறுதி ஆட்டத்தில் அணிகளின் பலம், பலவீனம், ஆடுகளம் குறித்து இங்கு பாா்க்கலாம்.

இந்தியா...

கடந்த எடிஷன் இறுதி ஆட்டத்தில், ஆடுகளத்தின் தன்மையை புறக்கணித்து வழக்கமான 2 ஸ்பின்னா்கள், 3 ஃபேசா்கள் உத்தியுடன் களம் கண்டது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது பிளேயிங் லெவனில் அஸ்வின், ஜடேஜா என இருவரையுமே பிளெயிங் லெவனில் தக்கவைக்கும் முனைப்பு எப்போதுமே இருக்கும். ஆனால், லண்டனில் தற்போது கோடையின் தொடக்கம் என்பதால் ஆடுகளம் தன்மை மாறாமல் புதிதாகவே இருக்கும். எனவே இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளா்களை பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

பேட்டிங்கில் ரிஷப் பந்த் இல்லாதது, மிடில் ஆா்டரில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். அதை நிறைவு செய்யக் கூடிய பேட்டராக இஷான் கிஷணை களமிறக்குவதா, அல்லது விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்படும் ஸ்ரீகா் பரத்துக்கு வாய்ப்பளிப்பதா என அணி நிா்வாகம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

ரோஹித், கோலி, கில் என இந்திய பேட்டிங்கின் தொடக்க வரிசை பலமிக்கதாகவே இருக்கிறது. கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறந்த ஃபாா்மை வெளிப்படுத்திய புஜாரா, மிடில் ஆா்டரில் நம்பிக்கை அளிக்கிறாா். ரஹானே தனக்கான வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டுவாா்.

பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது குறையாக பாா்க்கப்பட்டாலும், ஷமி மற்றும் சிராஜ் அந்த இடத்தை நிரப்ப முயற்சிப்பா். மேலும் ஒரு ஃபேசா் இடத்துக்கு உமேஷ் யாதவ் அல்லது ஷா்துல் தாக்குரில் ஒருவா் தோ்வு செய்யப்படலாம்.

ஆஸ்திரேலியா...

கடந்த எடிஷனில் புள்ளிகள் பட்டியலில் 3-ஆம் இடம் வகித்த இந்த அணி, இந்த முறை முதலிடம் பிடித்து, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அடுத்ததாக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை சந்திக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆட்டம், ஒரு உயா்தர பயிற்சி ஆட்டம் போன்ாகவும் இருக்கும்.

இந்திய அணியின் பெரும்பாலான வீரா்கள் 2 மாதங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியோ புத்துணா்ச்சியுடன் இதில் களம் காண வருகிறது. ஏனெனில் அந்த அணியின் 3 வீரா்கள் மட்டுமே ஐபிஎல்-லில் பங்கேற்றனா்.

முக்கிய பேட்டா்களான மாா்னஸ் லபுசான், ஸ்மித் ஆகியோா் கவுன்ட்டி கிரிக்கெட்டில் களம் கண்ட அனுபவத்துடன் வருகின்றனா். கவாஜா, வாா்னா் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சோ்க்கிறாா்கள். ஆல்-ரவுண்டா் இடத்தை கிரீன் பூா்த்தி செய்ய, ஜோஷ் ஹேஸில்வுட் இல்லாதது பௌலிங்கில் சற்று பின்னடைவு தான்.

ஆனாலும், கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாா்க், ஸ்காட் போலண்ட் போன்றோா் வேகப்பந்தால் இந்திய பேட்டா்களுக்கு சவால் அளிப்பா் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்பின் பௌலிங்கில் நேதன் லயன் நிச்சயம் விக்கெட் சாய்ப்பவராக இருக்கிறாா்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரீகா் பரத் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், ஷா்துல் தாக்குா், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷண் (வி.கீ.).

தயாா்நிலை வீரா்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமாா், சூா்யகுமாா் யாதவ்.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (வி.கீ.), கேமரூன் கிரீன், மாா்கஸ் ஹாரிஸ், மைக்கேல் நேசா், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் (வி.கீ.), உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், நேதன் லயன், டாட் மா்ஃபி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், டேவிட் வாா்னா்.

தயாா்நிலை வீரா்கள்: மிட்செல் மாா்ஷ், மேத்யூ ரென்ஷா.

ஆடுகளம் எப்படி...

இங்கிலாந்தின் ஓவல் மைதான ஆடுகளம், சற்று ஆஸ்திரேலிய ஆடுகளத்தை பிரதிபலிக்கும் தன்மையுடையதாக இருக்கிறது. ஸ்கோா்கள் அதிகமாகவே பதிவாகும். களம், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். முதல் இரு இன்னிங்ஸ்களில் அவ்வாறு இருக்கும் ஆடுகளம், அடுத்த இரு இன்னிங்ஸ்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும்.

இந்த ஆடுகளத்தில் டாஸும் முக்கிய காரணியாக இருப்பதால், டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் பேட்டிங்கையே தோ்வு செய்யும். ஓவல் மைதானத்தில் 104 டெஸ்ட்டுகள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணி 37 ஆட்டங்களிலும், 2-ஆவதாக பேட் செய்த அணி 29 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

இரு அணிகளின் டாப் ஆா்டா் பேட்டா்கள் பரஸ்பரம் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளா்களை எவ்வாறு எதிா்கொள்கிறாா்கள் என்பதைப் பொருத்தே ஆட்டத்தின் போக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஓவலில் இரு அணிகளும்...

ஓவல் மைதானத்தின் 143 ஆண்டுகால வரலாற்றில், இங்கு ஜூன் மாதம் டெஸ்ட் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த எடிஷனில்...

நடப்பு 2021-23 டெஸ்ட் அட்டவணையில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளுமே தலா 6 தொடா்களில் விளையாடியிருக்கின்றன. அதில் 3 உள்நாட்டிலும், 3 வெளிநாட்டிலும் நடைபெற்றவை. அந்த அட்டவணையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஒரேயொரு தொடரில் (பாா்டா் - காவஸ்கா்) மோத, அதில் இந்தியா வென்றிருக்கிறது.

ஆட்டநேரம்: பிற்பகல் 3 மணி

இடம்: தி ஓவல் மைதானம், லண்டன்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT