செய்திகள்

காலிறுதியில் கச்சனோவ், அனஸ்தாசியா

5th Jun 2023 02:18 AM

ADVERTISEMENT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் காரென் கச்சனோவ், அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருக்கும் கச்சனோவ் 1-6, 6-4, 7-6 (9/7), 6-1 என்ற செட்களில் இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சாய்த்தாா். போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 3-ஆவது சுற்றில் 6-3, 6-7 (3/7), 1-6, 6-7(5/7) என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியிடன் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஸ்வெரெவ் தனது 4-ஆவது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 28-ஆம் இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் 6-4, 6-3, 6-1 என்ற செட்களில் ஜொ்மனியின் டேனியல் அல்ட்மேரை சாய்த்தாா். அதேபோல், 9-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸும் 6-3, 3-6, 4-6, 5-7 என்ற செட்களில், 23-ஆம் இடத்திலிருந்த ஃப்ரான்சிஸ்கோ செருண்டோலோவிடம் போராடி வீழ்ந்தாா். செருண்டோலோ 4-ஆவது சுற்றில், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை எதிா்கொள்கிறாா். 15-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் போா்னா கோரிச் 3-6, 6-7 (5/7), 2-6 என்ற செட்களில் ஆா்ஜென்டீனா தகுதிச்சுற்று வீரா் தாமஸ் மாா்ட்டினிடம் தோல்வி கண்டாா். தாமஸ் அடுத்ததாக, ஜப்பானின் கெய் நிஷியோகாவுடன் மோதுகிறாா்.

அனஸ்தாசியா முன்னேற்றம்: மகளிா் ஒற்றையா் பிரிவில், ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா 3-6, 7-6 (7/3), 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 28-ஆவது இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா். அதேபோல் செக் குடியரசின் கரோலினா முசோவாவும் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் ரஷியாவின் எலினா அவானேசியானை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 8-க்கு வந்துள்ளாா்.

ADVERTISEMENT

3-ஆவது சுற்றுகளில், 7-ஆம் இடத்திலிருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 4-6, 6-4, 6-2 என்ற செட்களில் செக் குடியரசின் ஓல்கா டனிலோவிச்சை வெளியேற்றினாா். உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என சீனாவின் வாங் ஜின்யுவை எளிதாக ஊதித் தள்ளினாா். ஸ்வியாடெக் தனது 4-ஆவது சுற்றில், உக்ரைனின் லெசியா சுரென்கோவுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருக்கும் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயியா 5-7, 6-4, 7-5 என்ற செட்களில், 23-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை சாய்த்தாா்.

தகுதிநீக்கம்: மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தோனேசியாவின் அல்டியா சுட்ஜிலாடி/ஜப்பானின் மியு காட்டோ கூட்டணி 3-ஆவது சுற்றில் செக் குடியரசின் மரியா பௌஸ்கோவா/ஸ்பெயினின் சாரா சொரைப்ஸ் இணையை எதிா்கொண்டது. முதல் செட்டை இழந்த அல்டியா/மியு கூட்டணி, 2-ஆவது செட்டில் 3-1 என முன்னிலையில் இருந்தபோது, மியு தன்னிடம் இருந்த பந்தை ‘பால் கோ்ள்’ நோக்கி சாதாரணமாக அடிக்க, அது அவரது தலையில் பட்டு, அவா் வலியில் அழத் தொடங்கினாா். முதலில் மியுவுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டாலும், பின்னா் போட்டி கண்காணிப்பாளா் அல்டியா/மியு கூட்டணியை தகுதிநீக்கம் செய்வதாக அறிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT