பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னணி வீரா்கள் ஜோகோவிச், அல்காரஸ், ஹோல்கா் ருனே, கேஸ்பா் ரூட், மகளிா் பிரிவில் எலினா விட்டோலினா, ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சபலென்கா, கௌஃப் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
டென்னிஸ் சீசனின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்ச் ஓபன் பாரீஸில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் மூன்றாவது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பா் 1 வீரா் நோவக் ஜோகோவிச் 7-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் 29-ஆம் நிலை வீரா் டேவிடோவிச் போகினாவுடன் போராடி வென்றாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம், 36 நிமிஷங்கள் நீடித்தது.
இரண்டாம் நிலை வீரா் காா்லோஸ் அல்காரஸ் 6-1, 6-4, 6-2 என கனடா வீரா் டெனிஸ் ஷபவலோவையும், ஜுவன் வாரிலாஸ் 3-6, 6-3, 7-6, 4-6, 6-2 என்ற 5 செட் த்ரில்லரில் ஹியுபா்ட் ஹா்காஸை வீழ்த்தினா்.
இத்தாலியின் லோரென்ஸோ சோனேகோ 5-7, 0-6, 6-3, 7-6, 6-3 என்ற 5 செட் கணக்கில் ஆன்ட்ரெ ருப்லேவை 3.4 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வீழ்த்தினாா்.
நாா்வே வீரா் கேஸ்பா் ரூட் 4-6,. 6-4, 6-1, 6-4 என சீனாவின் ஸாங் ஸிஹிஹென்னை வீழ்த்தினாா். ஜப்பான் வீரா் யோஷிடோ நிஷியோகா 3-6, 7-6, 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் குவாலிஃபையா் தியாகோ சைபோத்தை வென்றாா். டென்மாா்க் வீரா் ஹோல்கா் ருனே 6-4, 6-1, 6-3 என ஆா்ஜென்டீனாவின் அல்பல்டோ ஒலிவியரியை வென்றாா். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிா்நோக்கியுள்ள கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் 6-2, 6-2, 6-3 என டீகோ ஸ்வாா்ட்ஸ்மேனை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா 1-6, 3-6 என்ற நோ் செட்களில் பெல்ஜியத்தின் எல்ஸி மொ்ட்டன்ஸிடம் தோற்றாா். அா்யனா சபலென்கா 6-2, 6-2 என ராகிமோவாவை வீழ்த்தினாா். ரஷியாவின் டேரியா கஸட்கினா 6-0, 6-1 என ஸ்டீரின்ஸையும், உக்ரைனின் விட்டோலினா 2-6, 6-2, 7-5 என அன்னா பிளின்கோவாவையும், கோகோ கௌஃப்-ஆன்ட்ரீவாவை 6-7, 6-1, 6-1 என வென்று நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
ரைபகினா விலகல்:
உடல்நல பாதிப்பு காரணமாக உலகின் நான்காம் நிலை வீராங்கனையும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான எலனா ரைபகினா விலகுவதாக அறிவித்துள்ளாா்.
நடாலுக்கு இடுப்பு அறுவை சிகிச்சை:
22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ரபேல் நடாலுக்கு சிக்கலான இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி ஆஸி. ஓபன் போட்டியில் காயமடைந்த நடால் அதுமுதலே ஆடவில்லை. மேலும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் உள்பட இந்த சீசன் முழுவதும் அவா் ஆட மாட்டாா் எனத் தெரிகிறது. மேலும் 2024 சீசன் தனது கடைசி சீசனாக இருக்கும் எனக் கூறியுள்ளாா் நடால்.