செய்திகள்

இந்தியா இடறியது எங்கே?

கவிதா சரவணன்

லகக் கோப்பை ஹாக்கி போட்டியை சொந்த மண்ணில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது இந்தியா. ஆனால், போட்டி இந்திய அணிக்கு வெற்றிகரமாக அமைந்ததா என்றால், இல்லை என்பதே பதில். 

ஆம், ஒடிஸôவில் நடைபெற்ற ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஜெர்மனி சாம்பியனான இந்தப் போட்டியில், இந்தியா 9-ஆம் இடமே பிடித்தது. 

ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகள் கழித்து வெண்கலப் பதக்கம் (டோக்கியோ 2021) வென்று வரலாறு படைத்தது, 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பெற்றது, எஃப்ஐஹெச் புரோ லீக் 2021-22 சீசனில் 3-ஆம் இடம் பிடித்தது என இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டு வந்தது. அதனால், 1975-க்குப் பிறகு (சாம்பியன்) இந்த முறை இந்தியா மீண்டும் உலகக் கோப்பை போட்டியின் பதக்க இடங்களுக்குள் வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் அந்தக் கனவுகளைக் கலைத்தது இந்திய அணி. இத்தனைக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்த 12 முக்கிய வீரர்கள் இந்த உலகக் கோப்பைக்கான அணியிலும் இருந்தனர். 

அரையிறுதி வரை முன்னேற இயலாவிட்டாலும், காலிறுதியிலாவது கால் பதிக்கும் தரத்துடன் இந்திய அணி இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், நேரடியாக அந்தச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து, "கிராஸ்ஓவர்' வாய்ப்பு வரை சென்று நியூஸிலாந்திடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறிய இந்தியா, கடந்த உலகக் கோப்பை போட்டியில் காலிறுதி வரை சென்று அதில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது நினைவுகூரத்தக்கது. 

அணி வீரர்களுக்கான பயிற்சி, திறமையை மேம்படுத்துவதற்கான வெளிநாட்டு பயணங்கள், உதவிப் பணியாளர்களுக்கான ஊதியம் என கோடிக் கணக்கில் இந்திய அணிக்கு செலவிட்டும், சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் சொல்லிக் கொள்ளும்படியான இடத்துக்குக் கூட வரவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமே. 

உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இது இந்திய அணியின் 5-ஆவது மிக மோசமான முடிவாகும். இதற்கு முன் 10 மற்றும் 12-ஆம் இடங்கள் வரை சென்றிருக்கிறது இந்தியா. 

சரி, வழக்கம்போல் போட்டி நிறைவடையும் தருணத்தில் அணியின் பின்னடைவு குறித்து அனைவரும் விவாதிப்பது வழக்கமானது தான். அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரே அவ்வாறு கூறியிருப்பது என்ன? பார்க்கலாம். 

தவறிய பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் 

இந்தியா விளையாடிய 4 ஆட்டங்களில் 26 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும், அதில் 5-இல் மட்டுமே இந்தியா கோலடித்திருக்கிறது. காலிறுதிக் கட்டத்தை தாண்ட முனையும் ஒரு அணி இவ்வளவு மோசமாக பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தல் ஆகாது. 

இந்த 5 கோல்களிலுமே 2 தான் நேரடி கோலாக ஸ்கோர் செய்யப்பட்டவை. மற்ற 3 வாய்ப்புகளுமே எதிரணி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டு மீண்டும் களத்துக்குத் திரும்பியபோது இடைவெளி பார்த்து கோலாக மாற்றப்பட்டுள்ளன. 

தடுப்பாட்டத்தில் முன்னேற்றம், உபகரணங்களை நுட்பமாகப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் சமீப காலங்களில் சர்வதேச போட்டிகளில் பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளில் அடிக்கப்படும் கோல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாலும், இதர அணிகளுடன் ஒப்பிடுகையில் அந்த கோல் எண்ணிக்கையில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது. 

கைவிட்ட ஃபார்ம் 

பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதற்கு ஹர்மன்பிரீத் சிங்கையே இந்திய அணி முற்றிலுமாக நம்பியிருந்ததும் ஒரு பின்னடைவாக சொல்லப்படுகிறது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 31 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளில் 10-இல் பலன் கிடைத்தது. டிராக் ஃப்ளிக்கில் சிறந்து விளங்கிய ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங் ஆகிய இருவரே அந்த கோல்களை அடித்தனர். 

அதில் 6 கோல்களை அடித்த ஹர்மன்பிரீத் சிங், பெனால்ட்டி கார்னரை கையாள்வதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறந்தவராக அறியப்பட்டார். எஃப்ஐஹெச்-இன் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராகவும் தேர்வானார். ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டியில் அந்த ஃபார்ம் அவருக்கு ஏமாற்றமளித்தது. 

அணியின் பல்வேறு பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை அவரே கையாண்டபோதும், அதில் 2-இல் மட்டுமே அவர் கோலடித்திருக்கிறார். 

நிலையில்லாத தடுப்பாட்டம் 

குரூப் சுற்றின் முதல் இரு ஆட்டங்களில் ஸ்பெயினை 2-0 என வீழ்த்திய இந்தியா, இங்கிலாந்துடன் கோலின்றி டிரா செய்தது. ஆனால், 3-ஆவது ஆட்டத்தில், உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற வேல்ஸ் அணியுடனான மோதலில் 2 கோல்களுக்கு வாய்ப்பு வழங்கியது. அடுத்ததாக கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கும் 2 கோல்கள் அடிக்க இடைவெளி அளித்தது. 

அதிலும், நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் 2 முறை முன்னிலை வகித்தும் பிறகு அதை தவறவிட்டுத் தோற்றது. அனுபவ வீரர்களான ரூபிந்தர் பால், வீரேந்திர லக்ரா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு தடுப்பாட்டத்தில் அந்த இடத்தை சரியாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை. 

அந்த இடத்தில் நிரப்பப்பட்ட அனுபவமில்லாத ஜர்மன்பிரீத் சிங், நீலம் சஞ்சீப் ஜெஸ் ஆகியோர் எதிரணிகளின் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறினர். 

சோபிக்காத தாக்குதல் ஆட்டம் 

அதேபோல், கிடைத்த வாய்ப்புகளை முன்கள வீரர்கள் தகுந்த முறையில் கோலாக மாற்றத் தவறினர். முன்னாள் கேப்டனான மன்பிரீத் சிங்கும் நடுகளத்தில் அவ்வளவாக சோபிக்காமல் ஆடினார். மேலும், மற்றொரு முக்கிய நடுகள வீரரான ஹார்திக் சிங் காயம் கண்டு விளையாட முடியாமல் போக, இந்த இரண்டுமே தாக்குதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

உளவியல் ஆலோசனை 

அனைத்துக்கும் மேலாக, உலகக் கோப்பை போன்ற ஒரு பிரதான போட்டிக்கு முன்பாக இந்திய அணியினருக்கு அந்தப் போட்டியின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்குவதும் அவசியம் என கிரஹாம் ரெய்ட் கருத்து தெரிவித்திருக்கிறார். அளவுகடந்த திறமைகள் இருந்தும், அதை சர்வதேச களத்தில் நுட்பமாக வெளிப்படுத்தவும், நெருக்கடியான தருணங்களில் தடுமாற்றமின்றி விளையாடவும் வீரர்களுக்கு இந்த ஆலோசனை அவசியம் என்கிறார் அவர். 
இவ்வாறு, இந்த உலகக் கோப்பை போட்டியின் மூலம் அறியப்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்களை சரி செய்தால் மட்டுமே, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டியாக இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா திறம்பட செயல்பட இயலும். சர்வதேச களத்தில் சாதிக்க இயலும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT