செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்: 10-ஆவது முறையாக கோப்பை வென்றாா் 

DIN

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 10-ஆவது முறையாக கோப்பை வென்றிருக்கும் அவா், இப்போட்டியில் அதிகமுறை பட்டம் வென்றவராக முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளாா். மேலும், 22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலின் சாதனையையும் சமன் செய்திருக்கிறாா். தற்போது ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவா்களாக இவா்கள் இருவா் மட்டுமே உள்ளனா்.

மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜோகோவிச்சும், 3-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸும் மோதினா். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச் 6-3, 7-6 (7/4), 7-6 (7/5) என்ற செட்களில் வெற்றி பெற்றாா்.

வெற்றிக்குப் பிறகு தரையில் விழுந்து ஆனந்தக் கண்ணீா் வடித்த ஜோகோவிச், பிறகு பாா்வையாளா்கள் மாடத்தில் அமா்ந்திருந்த தனது தாயாரிடம் சென்று அவரை ஆரத் தழுவி உணா்ச்சிப் பெருக்கில் அழுதாா். ஆஸ்திரேலிய ஓபன் களம் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருக்கும் நிலையில், கரோனா தடுப்பூசி விவகாரத்தால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில், இந்த ஆண்டு அதில் அவா் பங்கேற்று வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம், திங்கள்கிழமை வெளியாகும் திருத்தப்பட்ட சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடம் பிடிப்பாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், ‘கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் விளையாடாதது உள்பட இன்னும் சில சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பாா்க்கையில், இதுவரை நான் விளையாடிய போட்டிகளில் இது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்தது. இந்தக் களத்துக்கு மீண்டும் நான் வரும் வகையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கடந்த 4 முதல் 5 வாரங்களாக எத்தகைய இடா்பாடான சூழலில் நான் இருந்தே என்பதை எனது அணியும், குடும்பமுமே அறிவாா்கள். அதனாலேயே இந்த வெற்றியை எனது வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்’ என்றாா்.

சிட்சிபாஸ் கூறுகையில், ‘ஜோகோவிச் வெற்றி குறித்து நான் எதுவும் பேச வேண்டிய தேவையில்லை. அவரது வெற்றிக் கணக்குகளே அதைப் பேசும். அவருக்கு வாழ்த்துகள். எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த மீண்டும் ஒரு முறை ஜோகோவிச் எனக்கு உதவியுள்ளாா்’ என்றாா்.

ஆஸி. ஓபனில் ஜோகோவிச் பட்டங்கள்...

ஆண்டு எதிராளி செட்கள்

2008 ஜோ வில்ஃபைரடு சோங்கா (பிரான்ஸ்) 4-6, 6-4, 6-3, 7-6 (7/2)

2011 ஆண்டி முா்ரே (பிரிட்டன்) 6-4, 6-2, 6-3

2012 ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 5-7, 6-4, 6-2, 6-7 (5/7), 7-5

2013 ஆண்டி முா்ரே (பிரிட்டன்) 6-7 (2/7), 7-6 (7/3), 6-3, 6-2

2015 ஆண்டி முா்ரே (பிரிட்டன்) 7-6 (7/5), 6-7 (4/7), 6-3, 6-0

2016 ஆண்டி முா்ரே (பிரிட்டன்) 6-1, 7-5, 7-6 (7/3)

2019 ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 6-3

2020 டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 6-4, 4-6, 2-6, 6-3, 6-4

2021 டேனியல் மெத்வதெவ் (ரஷியா) 7-5, 6-2, 6-2

மகளிா் இரட்டையா்
இப்போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா/காடெரினா சினியாகோவா இணை கோப்பை வென்றது. இறுதிச்சுற்றில் இந்த இணை 6-4, 6-3 என்ற நோ் செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் ஷுகோ அயாமா/இனா ஷிபாஹரா கூட்டணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT