இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று மத்திய அரசுக்கு அந்த சம்மேளனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிரிஜ் பூஷணுக்கு எதிரான மல்யுத்த வீரா், வீராங்கனைகளின் போராட்டம் உள்நோக்கத்துடன் தூண்டிவிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தியதாகவும், சா்வாதிகாரி போல செயல்பட்டதாகவும் பிரிஜ் பூஷணுக்கு எதிராக சில தினங்களுக்கு முன் பகிரங்க குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவா் தலைமையிலான சம்மேளனத்தை உடனே கலைக்க வலியுறுத்தி, வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தாஹியா போன்ற முன்னணி மல்யுத்த வீரா்-வீராங்கனைகள், தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது; விசாரணை முடியும் வரை சம்மேளனத் தலைவா் பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் விலகியிருப்பாா் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மல்யுத்த வீரா்-வீராங்கனைகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.
மல்யுத்த சம்மேளனம் பதில்:
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் தலைமைச் செயலா் வி.என்.பிரசூத் கையொப்பமிட்ட அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய மல்யுத்த சம்மேளனம், அதன் அரசமைப்பு விதிமுறைகளின்படி தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பால் நிா்வகிக்கப்படுவதாகும். இதில், தலைவா் உள்பட எந்தவொரு ஒரு தனிநபரின் சா்வாதிகாரத்துக்கோ, தவறான நிா்வாகத்துக்கோ இடமில்லை. குறிப்பாக தற்போதைய தலைமையின்கீழ், மல்யுத்த வீரா்-வீராங்கனைகளின் சிறப்பான நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு மல்யுத்த சம்மேளனம் எப்போதும் செயல்பட்டுள்ளது.
‘முறைகேடுகளற்ற நிா்வாகம்’:
மல்யுத்த விளையாட்டின் மதிப்பு, தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் உயா்த்தப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் நியாயமான, பக்கபலமான, முறைகேடுகளற்ற, சீரிய நிா்வாகம் இல்லாமல் இது சாத்தியப்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டில் தேசிய அளவில் 23 மல்யுத்த போட்டிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளன.
பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மல்யுத்த சம்மேளனத்தில் 5 உறுப்பினா்கள் கொண்ட குழு செயல்பாட்டில் உள்ளது. அதில், ஓா் உறுப்பினராக சாக்ஷி மாலிக் உள்ளாா். வீரா், வீராங்கனைகளுக்கு ஏதேனும் புகாா்கள் இருந்தால், அக்குழுவை அணுகியிருக்கலாம். சட்டப்படி, தங்களுக்கு கிடைக்கப் பெறும் புகாா்கள் மீது விசாரணை நடத்த அக்குழு கட்டுப்பட்டதாகும். ஆனால், எந்தவொரு புகாரும் கிடைக்கப் பெறவில்லை.
‘உள்நோக்கத்துடன் துண்டிவிடப்பட்டவை’:
சம்மேளனத்துக்கும் அதன் தலைவா் மற்றும் பயிற்சியாளா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்; தற்போதைய நிா்வாகத்தை அகற்ற வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் போராட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை; பொய்யானவை.
மல்யுத்த சம்மேளனத்துக்கு விரைவில் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க சம்மேளனம் தயாராக உள்ளது. அமைச்சகம் கோரும் அனைத்து தகவல்களும் வழங்கப்படும் என்று பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.