செய்திகள்

இரு வருடங்களுக்கு முன்பு: ‘காபா’வில் சாகசம் செய்த இந்திய இளம் சிங்கங்கள்!

எழில்

விராட் கோலி, கே.எல். ராகுல், விஹாரி, ஜடேஜா, பும்ரா, அஸ்வின், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், ஷமி.

இவர்கள் அனைவரும் டெஸ்ட் வீரர்கள். இவர்களில் ஒருவர் கூட இடம்பெறாத ஓர் இந்திய டெஸ்ட் அணியைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படி ஓர் அணி அமைந்தாலும் அந்த அணி ஆஸ்திரேலியாவில் விளையாடி டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? அதுவும் 4-வது இன்னிங்ஸில் 328 ரன்களை விரட்டி?

அப்படி ஒரு சாகசத்தை இந்திய அணி வீரர்கள் நிகழ்த்தியதால் தான் காபா டெஸ்டை இந்திய ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாது.

2021-ம் வருடம் இதே நாளில் தான் அந்த அதிசயம் நடைபெற்றது.

சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் அஸ்வின் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை வம்புக்கு இழுத்த ஆஸி. கேப்டன் டிம் பெயின், காபாவுக்கு (பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம்) வந்து பார் என்பது போல சவால் விடுத்தார். அதற்குக் காரணம் உள்ளது. இந்த டெஸ்டுக்கு முன்பு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக 1988-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தோற்றது. அதன்பிறகு பிரிஸ்பேனில் விளையாடிய 31 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. அதேபோல இந்திய அணி இதற்கு முன்பு, பிரிஸ்பேனில் 6 டெஸ்டுகளில் விளையாடி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. 5 டெஸ்டில் தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்த பிரிஸ்பேனில் 32 வருடங்களாக தோல்வியைச் சந்திக்காத பிரிஸ்பேன் ஆடுகளத்தில், பரபரப்பான முறையில் கடினமான இலக்கை விரட்டி டெஸ்டை வென்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது ரஹானே தலைமையிலான இந்திய அணி. 

இந்திய அணி

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோா் காயம் காரணமாக விளையாடவில்லை. ஷா்துல் தாக்குா், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா், மயங்க் அகா்வால் ஆகியோா் களமிறங்கினார்கள். தமிழக வீரா்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா் ஆகிய இருவருக்கும் அது அறிமுக டெஸ்டாகும். பிரிஸ்பேன் டெஸ்டில் சிராஜ், சைனி, ஷர்துல் தாக்குர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என மொத்தமே 4 டெஸ்டுகள் அனுபவம் கொண்ட பந்துவீச்சுப் படையுடன் களமிறங்கி வெற்றி பெற்று சாதித்தது இந்திய அணி. 

டெஸ்ட் தொடங்குவதற்கு கடைசி நிமிடம் வரை யார் யார் விளையாடுவார்கள் என்பது இந்திய அணி நிர்வாகத்துகே தெரியாமல் இருந்தது. அந்தளவுக்கு முக்கிய வீரர்கள் பலரும் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். முதல் நாளன்று இந்திய வீரர்களில் யார் யாரால் நடக்க முடிந்ததோ அவர்கள் அனைவரும் அணியில் இடம்பெற்றார்கள் என்று அந்தச் சூழலை வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். 

*

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற 4-வது டெஸ்டுக்கு முன்பு டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

ரிஷப் பந்த்

5-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 63 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. 168 பந்துகளில் 43 ரன்களுடன் புஜாராவும் 23 பந்துகளில் 10 ரன்களுடன் ரிஷப் பந்தும் களத்தில் இருந்தார்கள். தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீதமுள்ள 7 விக்கெட்டுகளைக் கொண்டு ஒரு ஓவருக்குக் கிட்டத்தட்ட 4 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்கிற நிலைமை இருந்தது. அதன்பிறகு நடந்த ரன் வேட்டையை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. ஷுப்மன் கில் 91, புஜாரா 56, ரிஷப் பந்த் 89*, வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் எடுத்து மறக்க முடியாத வெற்றியை இந்திய அணிக்கு வழங்கினார்கள்.

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. பிரிஸ்பேனில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி 4-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரர்களைப் பயன்படுத்தியது. வெளிநாட்டுத் தொடரில் வேறு எந்த அணியும் இத்தனை வீரர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா, ரஹானே என இரு இந்திய வீரர்கள் மட்டுமே நான்கு டெஸ்டுகளிலும் விளையாடினார்கள்.

ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்திய அணிக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது பிசிசிஐ. இந்திய அணியின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும் உத்வேகமும் நன்குத் தெரிந்தது. வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார்கள். இந்திய அணிக்குப் பாராட்டுகள். அடுத்து விளையாடவுள்ள ஆட்டங்களுக்கு வாழ்த்துகள் என்றார். 

வாஷிங்டன் சுந்தர்

டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

 இந்திய அணியினரிடம் அற்புதமான குணாதிசயமும் தன்னம்பிக்கையும் உள்ளன. 36 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் வர முடியும் என நம்பிக்கை கொண்டார்கள். அணியை விட்டு விராட் கோலி சென்றாலும் அவர் எப்போதும் எங்களுடன் இருப்பார். ஏனெனில் இந்த அணி, இந்த ஒரு தொடரில் உருவாக்கப்பட்டதல்ல. கடந்த ஐந்தாறு வருடங்களில் உருவாக்கப்பட்டது. விராட் கோலியின் குணாதிசயம் அணியினருக்கும் பரவியுள்ளது. விராட் கோலி இல்லாத தருணத்தில் ரஹானே கேப்டனாக இருந்தார். நிதானமாகக் கையாளும் குணம் கொண்டவர். உள்ளுக்குள் அவர் ஒரு போராளி. விராட் கோலி இல்லாமல் அணியை நன்குக் கையாண்டுள்ளார் என்றார்.

* சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

சிராஜ்

காபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் சிராஜ். 5 விக்கெட் எடுத்த பிறகு சிராஜ் கூறியதாவது: தன் மகன் விளையாடுவதை உலகமே பார்க்கும் என என் தந்தை விரும்பினார். (5 விக்கெட்டுகள் எடுத்த) இந்த நாளைப் பார்க்க அவர் இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அவருடைய வாழ்த்துகளால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியாது. என் தந்தை இறந்த பிறகு சூழல் கடினமாக இருந்தது. என்னுடைய தாயாரிடம் பேசி வலிமையை அடைந்தேன். என்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் தான் என்னுடைய கவனம் இருந்தது என்றார்.

ஆஸி. டெஸ்ட் தொடர் முடிந்து, பிரிஸ்பேனிலிருந்து இந்திய வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். தெலங்கானா ஷம்ஷபத் விமான நிலையத்தில் வந்திறங்கிய சிராஜ், நேராக தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட காயர்தாபாத் இடுகாடுக்குச் சென்றார். அங்கு தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். 

வெற்றி ரன்னை ரிஷப் பந்த் எடுத்த பிறகு இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடோடி வந்து ரிஷப் பந்தைக் கட்டிக்கொண்ட காட்சியை யாரால் மறக்க முடியும்? இந்த 5-ம் நாள் காணொளியைப் பாருங்கள். எப்போது பார்த்தாலும் சிலிர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT