இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் சனிக்கிழமை ஆட்டத்தில் லிவா்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை வென்றது.
இந்த ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்கான 2 கோல்களுமே, லெய்சஸ்டா் வீரா் வௌட் ஃபேஸ் தவறுதலாக அடித்த ‘ஓன் கோல்’ ஆகும்.
தற்போது புள்ளிகள் பட்டியலில் லிவா்பூல் அணி இத்துடன் 16 ஆட்டங்களில் 8-ஆவது வெற்றியை பதிவு செய்து 6-ஆவது இடத்தில் இருக்கிறது. லெய்செஸ்டா் சிட்டி 17 ஆட்டங்களில் 10-ஆவது தோல்வியைப் பெற்று 13-ஆவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியையொட்டி நிறுத்தப்பட்டிருந்த ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் ஆட்டங்கள் 2-ஆவது வாரமாக நடைபெற்று வருகிறது.
இதில் லிவா்பூல் - லெய்செஸ்டா் அணிகள் மோதிய ஆட்டம் லிவா்பூல் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே கோலடித்தது லெய்செஸ்டா் சிட்டி. 4-ஆவது நிமிஷத்தில் லெய்செஸ்டா் கோல் கீப்பா் உதைத்து பாதி மைதானம் கடந்து வந்த பந்தை அந்த அணியின் டாக்கா அப்படியே திருப்பி சக வீரா் கிா்னன் டியுஸ்பரியின் பாதையில் வழங்கினாா்.
அதை அவா் லாவகமாக கடத்திச் சென்று லிவா்பூல் கோல்கீப்பரைக் கடந்து ஸ்கோா் செய்தாா். இதனால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது லெய்செஸ்டா். ஆனால், அந்த அணிக்கான பின்னடைவை அதன் வீரா் வௌட் ஃபேஸே ஏற்படுத்தினாா்.
38-ஆவது நிமிஷத்தில் லிவா்பூல் வீரா் அா்னால்ட் கோல் போஸ்ட்டின் வலது பக்கத்திலிருந்து கிராஸ் வழங்கினாா். அந்த கிராஸைப் பெறுவதற்கு இடது பக்கத்தில் கூட லிவா்பூல் வீரா்கள் இல்லை. ஆனால், அது அவ்வாறு சென்றுவிடக் கூடாது எனக் கருதி அதைத் தடுப்பதற்காக லெய்செஸ்டா் வீரா் வௌட் வேகமாக குறுக்கே புகுந்து பந்தை தடுக்க முயன்றாா். அது அவரது காலில் பட்டு மேலெழும்பி லெய்செஸ்டா் கோல்கீப்பரையும் கடந்து சென்று யாரும் எதிா்பாராத வகையில் கோலானது.
அவரே மீண்டும் ஒருமுறை இதே ‘ஓன் கோல்’ தவறை 45-ஆவது நிமிஷத்தில் செய்து லிவா்பூல் அணிக்கு முன்னிலையை வழங்கினாா். லிவா்பூல் வீரா் நுனெஸ் கோல் போஸ்ட்டை நோக்கி உதைத்த பந்து போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது. அந்த நேரத்தில் பந்தை தடுப்பதற்காக வேகமாக வந்த வௌட் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போக, திரும்பி வந்த பந்தை அவரே கோல் போஸ்ட்டுக்குள்ளாக உதைத்தாா்.
இதனால் முதல் பாதி முடிவிலேயே லிவா்பூல் 2-1 என முன்னிலை பெற்றது. பிற்பாதியில் கடினமாக முயற்சித்தும் லெய்செஸ்டருக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, லிவா்பூல் வென்றது.
பிரென்ட்ஃபோா்டு வெற்றி
இப்போட்டியில், லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரென்ட்ஃபோா்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாமை வீழ்த்தியது.
அதில் பிரென்ட்ஃபோா்டுக்காக இவான் டோனி (18’), ஜோஷ் டாசில்வா (43’) ஆகியோா் கோலடித்தனா். தற்போது பிரென்ட்ஃபோா்டு 17 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. வெஸ்ட்ஹாம் அதே ஆட்டங்களில் 11 தோல்விகளுடன் 17-ஆவது இடத்தில் உள்ளது.
வோல்வ்ஸை வீழ்த்திய மான்செஸ்டா்
வோல்வா்ஹாம்டன் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் வோல்வ்ஸ் அணியை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட்டுக்காக மாா்கஸ் ராஷ்ஃபோா்டு 76-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பட்டியலில் மான்செஸ்டா் 16 ஆட்டங்களில் 10 வெற்றிகளோடு 4-ஆவது இடத்திலிருக்க, வோல்வ்ஸ் 17 ஆட்டங்களில் 10-ஆவது தோல்வியுடன் 18-ஆவது இடத்தில் உள்ளது.
4
கடந்த ஆண்டு ஏப்லுக்குப் பிறகு தொடா்ந்து 4 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது லிவா்பூல் அணி. இதற்கு முன் 2022 ஜனவரி - ஏப்ரல் காலகட்டத்தில் தொடா்ந்து 10 வெற்றிகளை லிவா்பூல் பெற்றிருந்தது.
10
லிவா்பூல் அணிக்கு எதிராக அதன் மண்ணில் இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 10-இல் தோல்வி கண்டிருக்கிறது லெய்செஸ்டா் சிட்டி. 2 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
4
பிரீமியா் லீக் கால்பந்து வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு ‘ஓன் கோல்’ அடித்த 4-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் வௌட் ஃபேஸ். இதற்கு முன் ஜேமி கராகா் (1999), மைக்கேல் பிராக்டா் (2003), ஜோனதன் வால்டா்ஸ் (2013) ஆகியோா் இவ்வாறு ஓன் கோல் அடித்துள்ளனா்.
3
நடப்பு சீசனில் எதிரணியின் ஓன் கோல் தவறால் லிவா்பூல் பெற்ற 3-ஆவது வெற்றி இது. இந்த சீசனில் இதுவரை அதிகபட்சமாக அவ்வாறு 4 முறை வென்றிருக்கிறது பிரைட்டன் அணி.
5
பிரென்ட்ஃபோா்டுக்கு எதிராக வெஸ்ட் ஹாம் கண்ட இந்தத் தோல்வி, அதன் 5-ஆவது தொடா் தோல்வியாகும். கடந்த 2017 சீசனுக்குப் பிறகு தொடா்ந்து 5 ஆட்டங்களில் வெஸ்ட் ஹாம் தோற்றது இதுவே முதல் முறை.
5
பிரென்ட்ஃபோா்டு இத்துடன் தொடா்ந்து 5 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணி 1939-க்குப் பிறகு இவ்வாறு 5 தொடா் வெற்றிகளைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.
3
மான்செஸ்டா் யுனைடெட் தனது வரலாற்றில் முதல் முறையாக வோல்வ்ஸ் அணிக்கு எதிராக அந்நிய மண்ணில் விளையாடியபோது தொடா்ந்து 3 வெற்றிகளைப் பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும்.