செய்திகள்

தோல்வியால் ஃபாலோ ஆன் முடிவுக்கு வருத்தமா?: ஸ்டோக்ஸ் பதில்

DIN

ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொன்னதற்காக வருத்தப்பட மாட்டேன் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்  கூறியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான முறையில் நடைபெற்ற 2-வது டெஸ்டை 1 ரன் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து அணி. ஃபாலோ ஆன் ஆன பிறகு டெஸ்டை வென்ற 4-வது அணி என்கிற சாதனையைப் படைத்ததுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிநடை போட்டு வரும் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி புரட்சி செய்துள்ளது.

முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்ற நிலையில் 2-வது டெஸ்ட், வெலிங்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

2-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. கிராவ்லி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 23 ரன்களுடனும் ஆலி ராபின்சன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 9 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 210 ரன்கள் தேவைப்பட்டன. 

5-ம் நாள் ஆட்டம் எதிர்பார்த்ததை விடவும் பரபரப்பாக இருந்தது. வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் நியூசிலாந்து வீரர்கள் பந்துவீசினார்கள். இதனால் 22-வது ஓவரில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. இதன்பிறகு ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் நிலைமையைச் சீராக்கினார்கள். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. இதனால் அந்நாட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், வாக்னர், ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். ரூட்டை 95 ரன்களிலும் ஸ்டோக்ஸை 33 ரன்களிலும் வீழ்த்தினார். இங்கிலாந்து 215 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் சூடு பிடித்தது. கடைசியில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை, கைவசம் 1 விக்கெட் என்கிற நிலையில் பவுன்சர் போட்டு ஆண்டர்சனை ஆட்டமிழக்கச் செய்தார் வாக்னர். 2-வது இன்னிங்ஸில் இலக்குக்கு அருகில் சென்று 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை அடைந்தது நியூசிலாந்து அணி.

சிட்னி 1894, ஹெடிங்லி 1981, கொல்கத்தா 2001, வெலிங்டன் 2023 என நான்கு டெஸ்டுகளில் மட்டுமே ஃபாலோ ஆன் ஆன அணிகள், மீண்டு வந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன. அபாரமான வெற்றிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பென் ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் கூட்டணி 2-வது தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 7 டெஸ்டுகளில் இங்கிலாந்து அடைந்த முதல் தோல்வி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது முறையாக ஓர் அணி, 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ரசிகர்களால் மறக்க முடியுமா இந்த டெஸ்டையும் நியூசிலாந்தின் வெற்றியையும்?

டெஸ்ட் தொடரின் முடிவு 1-1 என சமன் ஆகியுள்ளது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சனும் தொடர் நாயகனாக ஹாரி புரூக்கும் தேர்வானார்கள்.

தோல்வி பற்றி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

நியூசிலாந்தை மீண்டும் பேட் செய்யும் விதமாக ஃபாலோ ஆனை அமல்படுத்திய பிறகு எங்களுக்கான தோல்வியை நாங்கள் தான் உருவாக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. இதற்கான காரணம் என்னவென்றால், நியூசிலாந்தின் முன்னணி பேட்டர்களைக் கடந்த மூன்று இன்னிங்ஸிலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி மிகச்சரியாக விளையாடினால் மட்டுமே எங்களை நெருக்கடிக்கு ஆளாக்க முடியும் என எண்ணினோம். நடப்பதை முன்பே அறிந்து தலைமை தாங்க முடியுமா?

கடைசி இன்னிங்ஸில் 250 ரன்களை விரட்ட வேண்டும் என்பதை எண்ணி நாங்கள் அஞ்சியதே இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்ததுடன் அருமையாகப் பந்துவீசி வெற்றியடைந்துள்ளார்கள். இப்போது என்னுடைய முடிவை எண்ணிப் பார்ப்பேனா என்றால் நிச்சயம் இல்லை. அந்த முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன். நியூசிலாந்து அணி எங்களை விடவும் நன்றாக விளையாடியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT