செய்திகள்

முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்: 177 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸி. அணி!

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களான வார்னர், கவாஜாவை முதல் மூன்று ஓவர்களிலேயே வெளியேற்றினார்கள் சிராஜும் ஷமியும். சிராஜ் வீசிய முதல் பந்திலேயே 1 ரன்னில் கவாஜா ஆட்டமிழந்தார். வார்னரும் 1 ரன்னில் ஷமி பந்தில் போல்ட் ஆனார். இதன்பிறகு ஸ்மித்தும் லபுஷேனும் அபாரமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 47, ஸ்மித் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் இந்தியாவின் கைவசம் வந்தது. ஆஸ்திரேலிய அணியின் மூன்று முன்னணி பேட்டர்களான லபுஷேன், ஸ்மித், ரென்ஷா ஆகியோரை வீழ்த்தினார் ஜடேஜா. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும்  ஜடேஜா விளையாடவில்லை. சமீபத்தில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடினார் ஜடேஜா.

இந்நிலையில் நாகபுரியில் முதல் நாளின் 2-வது பகுதியில் ஸ்மித்தை 37 ரன்களிலும் லபுஷேனை 49 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. ரென்ஷாவை டக் அவுட் செய்தார். இதனால் 84 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்கிற நிலையில் இருந்து 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஜடேஜா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பது முதல் நாளிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு போல்ட் செய்து வெளியேற்றினார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் இது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற புதிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். பிறகு பேட் கம்மின்ஸை 6 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின்.

பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (31 ரன்கள்), மர்பி (டக் அவுட்) ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து 5 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்தார் ஜடேஜா. காயத்துக்குப் பிறகு விளையாடினாலும் முதல் இன்னிங்ஸிலேயே தன் திறமையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். கடைசியாக, போலண்டை 1 ரன்னில் போல்ட் செய்தார் அஸ்வின்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. ரோஹித் சர்மா விரைவாக ரன்கள் சேர்த்தார். நிறைய பவுண்டரிகள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். கே.எல். ராகுல் 20 ரன்களில் அறிமுக வீரர் மர்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 68 பந்துகளில் அரை சதமெடுத்தார்  ரோஹித் சர்மா.

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா (56 ரன்கள்), அஸ்வின் (0) களத்தில் உள்ளார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 100 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT