செய்திகள்

ஜடேஜா 5, அஸ்வின் 3 விக்கெட்டுகள்: முதல் நாளில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா!

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களான வார்னர், கவாஜாவை முதல் மூன்று ஓவர்களிலேயே வெளியேற்றினார்கள் சிராஜும் ஷமியும். சிராஜ் வீசிய முதல் பந்திலேயே 1 ரன்னில் கவாஜா ஆட்டமிழந்தார். வார்னரும் 1 ரன்னில் ஷமி பந்தில் போல்ட் ஆனார். இதன்பிறகு ஸ்மித்தும் லபுஷேனும் அபாரமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 47, ஸ்மித் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் இந்தியாவின் கைவசம் வந்தது. ஆஸ்திரேலிய அணியின் மூன்று முன்னணி பேட்டர்களான லபுஷேன், ஸ்மித், ரென்ஷா ஆகியோரை வீழ்த்தினார் ஜடேஜா. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும்  ஜடேஜா விளையாடவில்லை. சமீபத்தில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடினார் ஜடேஜா.

இந்நிலையில் நாகபுரியில் முதல் நாளின் 2-வது பகுதியில் ஸ்மித்தை 37 ரன்களிலும் லபுஷேனை 49 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. ரென்ஷாவை டக் அவுட் செய்தார். இதனால் 84 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்கிற நிலையில் இருந்து 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஜடேஜா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பது முதல் நாளிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு போல்ட் செய்து வெளியேற்றினார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் இது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற புதிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். பிறகு பேட் கம்மின்ஸை 6 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின்.

பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (31 ரன்கள்), மர்பி (டக் அவுட்) ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து 5 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்தார் ஜடேஜா. காயத்துக்குப் பிறகு விளையாடினாலும் முதல் இன்னிங்ஸிலேயே தன் திறமையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். கடைசியாக, போலண்டை 1 ரன்னில் போல்ட் செய்தார் அஸ்வின்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT