செய்திகள்

நான்கு மாதங்களுக்கு முன்பு ஊன்றுகோலுடன்: இன்று 5 விக்கெட்டுகள்!

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஜடேஜா.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஜடேஜா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பது முதல் நாளிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மூன்று பேட்டர்களான லபுஷேன், ஸ்மித், ரென்ஷா ஆகியோரை வீழ்த்தினார் ஜடேஜா. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 22 ஓவர்களை வீசி 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்டுகள், 171 ஒருநாள், 64 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 210 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 ஆட்டங்களில் விளையாடிய 3-வது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார். ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய பேட்டிங் மோசமானதாலும் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதையடுத்து கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார். 

கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். பிறகு டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய வீட்டில் ஊன்றுகோலின் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் ஜடேஜா. ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் எனக் குறிப்பிட்டார். இந்தப் படம் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டியவருக்கு இந்த நிலைமையா எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணிக்காக தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடினார் ஜடேஜா. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும்  ஜடேஜா விளையாடவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசி 171. ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஜடேஜா. எனினும் இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் நாளிலேயே தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் சிறப்பாகப் பந்துவீசுவார். இந்தமுறை கூடுதல் உத்வேகத்துடன் பந்துவீசுகிறார். இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல ஜடேஜாவின் பங்களிப்பு மிகவும் அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT