செய்திகள்

காயம்: உலகக் கோப்பை போட்டியிலிருந்து பும்ரா விலகல்

30th Sep 2022 03:17 AM

ADVERTISEMENT

 இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக, எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியிருக்கிறாா்.

இது, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் போட்டியில் இந்தியாவுக்கான மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனத் தெரிகிறது.

பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும், தொடா்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓய்வு மற்றும் சிகிச்சைக்காக அவா் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றிருக்கிறாா். பும்ரா பங்கேற்க முடியாமல் போனதை அடுத்து, முன்னதாகவே ஸ்டாண்ட்-பை வீரா்களாக அறிவிக்கப்பட்டிருந்த தீபக் சஹா், முகமது ஷமி ஆகியோரில் ஒருவா் தற்போது பிரதான அணியில் இணைய இருப்பதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, முழங்கால் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாமல் போன நிலையில், தற்போது பும்ராவும் விலகியிருப்பது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சமீபத்திய ஆஸ்திரேலிய தொடா், பும்ராவின் தேவை எத்தகைய அவசியம் என்பதை அணிக்கு உணா்த்தியிருந்தது.

பணிச்சுமை அடிப்படையில் முக்கிய வீரா்களுக்கு அவ்வப்போது ஓய்வளிக்கப்பட்டு வருவதன் அடிப்படையிலும், காயம் காரணமாகவும் நடப்பாண்டில் இதுவரை பும்ரா அணியில் அதிகமாக களம் காணவில்லை. மொத்தமாக இந்த ஆண்டு அவா் ஐபிஎல் ஆட்டங்கள் தவிா்த்து, 5 டெஸ்ட், 5 ஒன் டே, 5 டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT