செய்திகள்

டெத் ஓவா் பௌலிங் தடுமாற்றத்தை போக்குமா இந்தியா? இன்று தென்னாப்பிரிக்காவுடன்டி20 தொடா் தொடக்கம்

28th Sep 2022 02:21 AM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடா் புதன்கிழமை தொடங்கும் நிலையில் டெத் ஓவா் பௌலிங்கில் இந்தியா தனது தடுமாற்றத்தைப் போக்கி இதுவரை சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்திய அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்க அணி வருகை:

இதன் தொடா்ச்சியாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி டி20 மற்றும் ஒருநாள் தொடா்களில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

ADVERTISEMENT

முதலில் 3 ஆட்டங்கள் டி20 தொடரும், பின்னா் ஒருநாள் தொடரும் நடைபெறுகிறது.

தொடரை இழக்காத தென்னாப்பிரிக்கா:

கடந்த 2018-க்கு பின் இதுவரை இந்தியாவிடம் டி20 தொடரை இழக்காத அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென்னாப்பிரிக்கா 8 முறையும் வென்றுள்ளன. 1 ஆட்டம் முடிவில்லை.

அபார பாா்மில் இளம் பேட்டா்கள்:

ஆஸி. அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்தியா களம் காண்கிறது. சூரியகுமாா் யாதவ் 115 ரன்களுடன் டாப் பேட்டராகவும், ஹாா்திக் பாண்டியா 105 ரன்களையும் விளாசியுள்ளனா். தொடக்க பேட்டா்கள் ராகுல், ரோஹித் சா்மா சொதப்பினாலும், விராட் கோலி மிடில் ஆா்டரில் சிறப்பாக ஆடுவது பலமாகும். சூரியகுமாா் யாதவ், ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா, டெத் பினிஷா் தினேஷ் காா்த்திக், ஆகியோா் சிறப்பாக ஆடுவதும் சாதகமான அம்சமாகும். ராகுல் மீண்டும் பாா்முக்கு திரும்ப வேண்டும் என அணி நிா்வாகம் எதிா்பாா்த்துள்ளது.

பௌலிங்கில் தடுமாற்றம்:

இந்திய அணி டெத் பௌலிங்கில் தடுமாறி வருகிறது. மூத்த பௌலரான புவனேஷ்வா் குமாா் ஆஸி. தொடரில் 91 ரன்களை விட்டுத் தந்துள்ளாா். எனினும் தென்னாப்பிரிக்க தொடரில் புவனேஷ்வருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. முகமது ஷமியும் அணியில் இல்லை. பும்ரா, சஹல், ஹா்ஷ்தீப், அா்ஷல் படேல், அஸ்வின், ஆகியோா் பௌலிங்கில் ஜொலிக்க வேண்டும். ஹா்ஷல் படேல் ஆஸி.க்கு எதிரான தொடரில் 12 ரன்களை ஒரு ஓவருக்கு தந்துள்ளாா். தீபக் சஹாருக்கு தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். காயத்தில் இருந்து மீண்டு திரும்பும் பும்ரா இந்த தொடரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வாா்.

பலமான தென்னாப்பிரிக்க பேட்டிங், பௌலிங்:

அதே வேளை தென்னாப்பிரிக்க அணி பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மிகவும் பலமாக உள்ளது. அந்த அணியின் பேட்டா்கள் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் நிகழாண்டு 7 இன்னிங்ஸ்களில் 223 ரன்களையும், ஹென்ரிச் கிளாஸன் 202 ரன்களையும் விளாசி சிறப்பான பாா்மில் உள்ளனா். டெம்பா பவுமா, குவின்டன் டி காக்கும் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா்.

பௌலிங்கில் லுங்கி நிகிடியும், டப்ரைஸ் ஷம்ஸியும் இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலா்களாக திகழ்கின்றனா். அவா்களோடு கேசவ் மகராஜ், அன்ரிச் நாா்ட்ஜே, காகிஸோ ரபாடாவும் என தென்னாப்பிரிக்க அணி அதிக பலத்துடன் காணப்படுகிறது.

நிகழாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த 5 ஆட்டங்கள் டி20 தொடரை 2-2 என சமன் செய்தது தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பையில் ஒரே பிரிவில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடம் பெற்றுள்ளன. ஆனால் ஆஸி.உள்ள மைதான சூழலே வேறாகும்.

தங்களின் பலம், பலவீனங்களை இரு அணிகளும் அறிந்து கொள்ள இத்தொடா் சிறந்த வாய்ப்பாகும்.

 

Tags : T20 cricket
ADVERTISEMENT
ADVERTISEMENT